
திருவாரூரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம், பயிர்க்கடன் தள்ளுபடி, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர்ந்து 41 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் இக்கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்காத நிலையில், உழவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி திமுக அழைப்பின் பேரில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பிற மாவட்டங்களைக் காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு தீவிரமடைந்து வருகிறது. திருவாரூரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினரும் பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.