எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி - ஸ்டாலின்  போடும் திட்டம்...

Asianet News Tamil  
Published : Jun 22, 2018, 06:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி - ஸ்டாலின்  போடும் திட்டம்...

சுருக்கம்

All the ministries including Edappadi Palaniasamy are sure to go to jail - Stalin plan

திருச்சி

அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கு மாதந்தோறும் 10 கோடி வரை கமிஷன் போகிறது என்றும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் சிறைக்குப்போவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சியில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர், "2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை காங்கிரசு ஆதரவோடு தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால், அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா நமது ஆட்சியை மைனாரிட்டி அரசு என்றுதான் பேசும்போது எல்லாம் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த ஆட்சியை தலைவர் கருணாநிதி ஐந்தாண்டுகள் முழுமையாக நடத்தியதோடு, இது மைனாரிட்டிகள் (சிறுபான்மையினர்) நடத்தும் ஆட்சிதான் என்று பல முறை கூறியிருக்கிறார்.

இன்று தமிழகத்தின் நிலை என்ன? மத்தியில் மத வெறிபிடித்த, தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

நீட் தேர்வினால் ஏழை, எளிய வீட்டு பிள்ளைகள் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவராக முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கத்தில் தமிழகத்தில் மாணவிகள் தங்களது உயிரை மாய்த்து கொண்டனர்.

இதுபற்றியெல்லாம் மத்திய அரசு கவலைப்படவில்லை. இதனை தட்டிக்கேட்க கூடிய நிலையில் இங்குள்ள எடப்பாடி பழனிசாமி அரசும் இல்லை. பழனிசாமிக்கு தமிழ்நாட்டை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் கிஞ்சிற்றும் கவலை இல்லை.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு ஒப்பந்தத்தில் தொடங்கி எல்லாவற்றிலும் கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் மாதம் ரூ.4 கோடி முதல் 10 கோடி வரை பெறுகிறார்கள். அந்த பணத்தில் ஓட்டல் உள்பட பலவற்றை வாங்குகிறார்கள்.

இதுபற்றி எல்லாம் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும். அப்போது எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் சிறைக்குப்போக தான் போவார்கள். 

ஸ்டாலின் நினைத்தால் ஆட்சியை பிடித்து விடலாம் என்று படிக்காதவர்கள் மட்டுமல்ல நன்கு படித்தவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் கூட பேசுகிறார்கள். நடைபயிற்சி செல்லும்போது கூட என்னிடம் இந்த ஆட்சியை முடிக்க மாட்டீர்களா? என்று கேட்கிறார்கள். 

இதை எல்லாம் தாண்டி, கருணாநிதி நன்றாக இருந்திருந்தால் இப்படி விட்டு வைத்திருப்பாரா? என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் பலமுறை பதில் அளித்துவிட்டேன். 

ஒரு பேச்சுக்கு 10 எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக்கொண்டால் கூட அவர்களுக்கு நாம் மாமூல் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு ஆட்சி அமைத்தால் மக்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். எனவே தான் அப்படி ஒரு முடிவுக்கு நாம் வரவில்லை. 

தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும் நாம் தான் ஆளுங்கட்சி என மக்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் தி.மு.க. ஜனநாயக வழியில் தான் செயல்படும்.

தி.மு.க. எந்த ஒரு கால கட்டத்திலும் யார் ஆட்சியையும் கவிழ்த்தது இல்லை. இது தான் வரலாறு.  இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 

அவர்களது விருப்பத்தின்படி நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்சியை நாம் அமைக்க வேண்டும். அதற்கான நிலையை உருவாக்க இந்த கூட்டத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.  
 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!