நாளைக்கே டெல்லி கிளம்புறோம்... கர்நாடகாவிற்கு எதிராக களம் இறங்கும் அனைத்து கட்சி பிரதிநிதிகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 14, 2021, 5:33 PM IST
Highlights

மூன்றாவது தீர்மானத்தின் படி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு பிரதிநிதிகள் நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக் கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரு தினங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

திமுக, அதிமுக, பாஜக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றதோடு, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ​உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாதும் என்றும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இரண்டாவது தீர்மானமும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது என்றும், அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என்றும் 3வது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

மூன்றாவது தீர்மானத்தின் படி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு பிரதிநிதிகள் நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாளை பிற்பகல் 1 மணிக்கு குழு டெல்லி புறப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!