கொரோனா 3வது அலைக்கும் அரசியல் கட்சிகள் காரணமாகிவிடக்கூடாது.. அமைச்சர் மா.சு வேண்டுகோள்.

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2021, 5:16 PM IST
Highlights

கொரோனா & கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார். நீட் தேர்வு தொடர்பாக, ஏ.கே.ராஜம் குழு 83 ஆயிரம் பேரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவியதற்கு கடந்த தேர்தல் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவே கொரோனா மூன்றாம் அலைக்கு அரசியல் கட்சிகள் வழிவகுக்கக் கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மைய கூட்டரங்கில் மாநில அளவிலான தன்னார்வளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அரசுக்கு 9 கோடி மதிப்பிலான 1000  ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதனை  மருத்துவத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவைகள் பெருமளவில் தேவைப்பட்டது.

இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு அமைப்புகள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றனர். இன்றும் பூமி என்கிற தன்னார்வ அமைப்பு 1000 செறிவூட்டிகளை வழங்கி உள்ளது என்றார், மேலும் சென்னையில் டெங்கு பாதித்தவர்கள் நலமுடன் உள்ளதாகவும், டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். நாளை மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறிய அவர், தடுப்பூசியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், எச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி திறப்பு & மாணவர் சேர்க்கை, தமிழகத்தில் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. கொரோனா & கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார்.

நீட் தேர்வு தொடர்பாக, ஏ.கே.ராஜம் குழு 83 ஆயிரம் பேரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்றார். கொரோனா இறப்பு குறித்து மறைக்க வேண்டிய அவசியம் துறைக்கு கிடையாது என்று கூறிய அமைச்சர்,இறப்பு குறித்து, அறிக்கை வெளியிடும் போது அதில் எந்தவித தவறும் நிகழவில்லை என கூறினார். மேலும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கும் போது, அரசியல் கட்சிகளும் அதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஏற்கனவே கடந்த தேர்தலின் போது தான் கொரோனா 2 வது அலை அதிகமாக வளர்ந்தது என்று குற்றம் சாட்டி வருகின்றனர், எனவே அதை கருத்தில் கொண்டு 3ம் அலைக்கு வழி வகுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்பட கூடாது என அமைச்சர் கேட்டுக்கொண்டார். 
 

click me!