
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் சாலை மறியல் நடைபெற உள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
41 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கபட்டிருந்தது.
இதை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் இருந்தார்.
பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடவும் எடப்பாடி வலியுறுத்தினார். ஆனால் மோடியை சந்திக்காமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 25 ஆம் அனைத்து கட்சியினர் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மறியல் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், திருநாவுகரசர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.