
இலங்கை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள கடல் எல்லை சட்டம், தமிழக மீனவர்களைக் கடுமையாக பாதிக்கும் என்றும், தமிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையால் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும், வலைகளை சேதப்படுத்துவதும் வருகிறது.
இதனால், மீனவர்களின் மீன்பிடி தொழில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பெரும சிரமத்துற்கு ஆட்படுகிறார்கள்.
குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டும், பின்னர் விடுவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர, சுமூகத் தீர்வு ஏற்படுவதற்கு மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்தால் 17 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் நலனுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக மீனவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இலங்கை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள கடல் எல்லை சட்டம், தமிழக மீனவர்களைக் கடுமையாக பாதிக்கும் என்றார். மீனவர்கள் நலனுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு மீனவர்கள் பரஸ்பரம் மீன்பிடிக்க ஒத்துவரும் நிலையில் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது.
கடலில் எல்லை என்பதே ஒரு கற்பனைக்கோடுதான். அதை மீனவர்களால் தீர்மானம் செய்ய முடியாது. மீன் பிடி தொழிலும் வேட்டையாடுவதைப் போன்றதுதான். கடலில் மீன்கள் ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்காது. இந்திய எல்லை, இலங்கை எல்லை என்பதெல்லாம் மீன்களுக்குத் தெரியுமா? மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.