TN College Exam: கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Jan 21, 2022, 12:52 PM IST
Highlights

இந்த ஆண்டு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது. நேரடி தேர்வாக மட்டுமே செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. 

தமிழகத்தில் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் கடந்த கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஆன்லைன் தேர்வுகளில் வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதி கொரியர் அனுப்பினர். சில கல்லூரிகளில் இணையதளம் வாயிலாக மொத்த தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன.

மேலும், ஆன்லைனில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததால், ஆன்லைனிலேயே மறுதேர்வும் நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த காரணத்தால், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து, இந்த ஆண்டு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது. நேரடி தேர்வாக மட்டுமே செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், கொரோனா, ஒமிக்ரான் பரவல் நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி;- தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி அடிப்படையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும்.

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகிறது என விளக்கமளித்துள்ளார். பிப்ரவரி 20ம் தேதிக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.  ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடக்கும். சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறித்து 29ம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.

click me!