தமிழகத்தில் மதமாற்றம் எனும் விஷச் செடி.. பழைய கோரிக்கையை தூசு தட்டிய பாஜக.. பற்றி எரியும் லாவண்யா தற்கொலை.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2022, 12:39 PM IST
Highlights

மதமாற்றம் தமிழகத்தில் வேகமாக பரவுகிறது ஒரு  விஷச்செடி, ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இங்கு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும், இதை தடுக்க கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மதமாற்றம் என்ற விஷச்செடி தமிழகத்தில் வேகமாக பரவுகிறது அதை தடுக்க கட்டாய மதமாற்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதே நேரத்தில் மாணவ மாணவிகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்துவதுடன் அதை ஏற்க மறுப்பவர்களுக்கு உளவியல் ரீதியாக சித்திரவதை அளித்து தற்கொலைக்கு தூண்டும் தஞ்சாவூர் பள்ளி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக காவல்துறை டிஜிபி கடிதம் எழுதியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளைத்தை சேர்ந்தவர் முருகானந்தம், இவரின் மகள் லாவண்யா (17), இவரை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில்  பெற்றோர்கள் சேர்த்தனர். தற்போது 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  அவர் அந்தப் பள்ளியின் விடுதியிலேயே தங்கி பயின்று வந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி திடீரென லாவண்யா வாந்தி எடுத்துள்ளார். கடுமையான வயிற்றுவலி என மாணவி அலறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பிறகு மறுநாள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் மாணவியை ஒப்படைத்தனர். அப்போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லாவண்யா பூச்சி மருந்து குடித்துள்ளதாக கூறினர். தன்னை விடுதி வார்டன் அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டுமென டார்ச்சர் செய்ததாகவும் அந்த மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும் கூறி மாணவி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு மாணவியின் தந்தை தகவல் தெரிவித்தார். அதையடுத்து போலீசார் மாணவியை விசாரித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மாணவி பயின்ற பள்ளி சேக்ரட் ஹார்ட் அதாவது கிறிஸ்தவ நிர்வாகம் என்பதால் அப்பள்ளியில் மாணவியை சட்டவிரோதமாக மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகவும், அதை ஏற்றுக் கொள்ளாததால் மாணவியை அறைகளை சுத்தம் செய்யச் சொல்லி வார்டன் உள்ளிட்டோர் டார்ச்சர் செய்ததாகவும், அதனால்தான் மாணவி  தற்கொலை செய்து கொள்ள பூச்சிமருந்து குடித்தார் என்றும் பாஜக,  இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளனர். மாணவி மதமாற்றத்தை ஏற்க மறுத்ததால் கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்லி, பாத்திரங்களை கழுவ சொல்லி தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பிரியங்க் கனுங்கே குற்றம்சாட்டியுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் அப்பள்ளி நிர்வாகம் மூலம் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்த அந்த தனியார் பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத்தி, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தமிழக டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ மாணவியரிடம் புகாரை பெற்று அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கடிதத்தை பெற்ற ஏழு நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல்  செய்து ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஏழை விவசாயியின் மகள் லாவண்யா அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, இவரை மதம்  மாறச் சொல்லி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்த மாணவி கொடுத்த வாக்குமூலம் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில் அந்த மாணவி, என் அப்பாவிடமும் அம்மாவிடமும் என்னை கிறிஸ்டியனாக மாற்றி விடவா? நானே படிக்க வைக்கவா? என்று கேட்டார்கள். இது இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தது, அதிலிருந்து என்னை திட்டி கொண்டே இருப்பார்கள், என்னை இங்கே தங்கக்கூடாது என்று கூறுவார்கள், சிஸ்டர் ஆரோக்கிய மேரி என்பவர் தான் அப்படிக் கேட்டார் என்று அந்த  வீடியோவில் மாணவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மாணவி லாவண்யா தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி படித்துள்ளார். அவரை சிஸ்டர் சகாயமேரி மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார், மாணவியின் பெற்றோரையும் சந்தித்து அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற கட்டாயப் படுத்தி உள்ளனர். மாணவியின் பெற்றோரும் இதற்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால் மாணவியை படிக்க விடாமல் விடுதியிலுள்ள இதர வேலைகளை செய்யுமாறு தொடர்ந்து மாணவிக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு உடைந்துபோன மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியில் இருந்த விஷத்தன்மை உள்ள திரவத்தை அருந்தியுள்ளார், மாணவிக்கு உடல் நலக்கேடு ஏற்பட்டதால் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர், எனவேதான் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில்தான் காவல்துறையினர் நடத்தியுள்ள முதல் தகவல் அறிக்கைக்கும், மாணவி பேசிய வீடியோ பதிவிற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. மாணவி பேசியுள்ள வீடியோவில் சிஸ்டர் சகாய மேரியும், பள்ளி நிர்வாகத்தினரும் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தினர் என்பதை உறுதி செய்துள்ளது. எனவே அரசு நடுநிலை விசாரணை நடத்த வேண்டும், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை விரைந்து கொண்டு வரவேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு நிதி உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மதமாற்றம் தமிழகத்தில் வேகமாக பரவுகிறது ஒரு  விஷச்செடி, ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இங்கு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும், இதை தடுக்க கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் அரியலூர் மாணவி லாவண்யா தெளிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் மதமாற்றம் எந்த அளவுக்கு வற்புறுத்தப்பட்டு நடத்தப்படுகிறது என்பதை அவரது வாக்குமூலம் காட்டுகிறது. மாணவியின் மரணத்திற்கு நீதி வழங்குவதோடு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  யூடியூபர் மாரிதாஸ் போலி மதச்சார்பின்மை பேசுவதைவிட எந்த மதத்தையும் கட்டாயப்படுத்துவது, அதேநேரம் இந்துக்களின் ஆன்மிகத்தை அழிக்கத் துடிக்கும் கும்பலை எதிர்த்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம், மதமாற்றம் ஓநாய்களுக்கு எதிராக இங்கே மீடியா விவாதம் நடத்துமா என கேள்வி எழுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதமாற்ற தடைச் சட்டம் என்ற கோரிக்கையே லாவண்யா மூலம் மீண்டும் பாஜக தூசு தட்டியுள்ளது.  
 

click me!