மதுரையில் உள்ள கோவில் ஒன்றில் பிராமணர் அல்லாத ஒருவர் தமிழகத்திலேயே முதன்முறையாக அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைவரும் அர்ச்சகராகலாம் என்று போட்ட உத்தரவு 12 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியுள்ளது.
தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்க அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார். அனைத்துத் துறைகளிலும் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் கோவில்களில் பிராமணர் மட்டுல்லாமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் நீண்ட காலமாக போராடினார்.
undefined
அவரது கனவை நனவாக்கும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியை 2008-ல் தமிழக அரசு நடத்தியது. இந்த பயிற்சியை 206 பேர் நிறைவு செய்தனர்.
அதே நேரத்தில் ஆகம விதிகளை மீறினால் பணி நீக்கம் செய்யலாம் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அர்ச்சகர் பயிற்சி படித்த மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது.
மதுரை அருகே உள்ள எஸ். ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமிக்கு 36 வயதாகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சிறுவயது முதலே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.
தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ள அவர் கடந்த 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆன்மீக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்..
இந்த நிலையில்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை மதுரை தல்லாகுளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகர் தேவை என்று விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்து மாரிச்சாமி அதற்கு விண்ணப்பித்தார்.
அதன்பின் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் மாரிச்சாமி வெற்றிபெற்று கடந்த 26 ஆம் தேதி தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி கண்ட கனவு பல ஆண்டுகளுக்குப் பின் நனவாகியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என போட்ட உத்தரவு தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது. இது பிற்படுத்த மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
ஆனாலும் இந்த விஷயத்தில் கேரள முதலமைச்சர் தான் முன்னோடி என சொல்லலாம். ஏனென்றால் அவர் கடந்த ஆண்டே கேரளாவில் தலித்துகளை அர்ச்சகர்களாக்கி உத்தரவிட்டார்.