நாளை மறுநாள் திருவாரூர் செல்கிறார் மு.க அழகிரி......கள நிலவரத்தை ஆய்வு செய்ய அதிரடி திட்டம் !!

By Selvanayagam PFirst Published Sep 21, 2018, 9:33 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதியின்   மறைவையடுத்து திருவாரூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட மு.க.அழகிரி முடிவு செய்துள்ளதாக வந்த தகவலையடுத்து அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்ய அழகிரி நாளை மறுநாள் திருவாரூர் செல்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை முயன்றும் அவரால் மீண்டும் திமுகவில் சேர முடியவில்லை.

இந்நிலையில்தான் கடந்த மாதம் 7 ஆம் தேதி  உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கருணாநிதி மரணமடைந்தார். அவர் இறந்த மூன்றாவது நாளே திமுக தொண்டர்கள் அனைவரும் எனக்கு பின்னே நிற்கிறார்கள் என கொளுத்திப் போட்டார்.

மேலும் தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து  அழகிரி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின. அது மட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் தொகுதியில்  டிடிவி கட்சிக்கு அழகிரி ஆதரவு அளிப்பது என்றும், திருவாரூர் தொகுதியில் அழகிரிக்கு, தினகரன் சப்போர்ட் பண்ணுவது என்றும் முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் தனக்கு உள்ள செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள நாளை மறுநாள் அழகிரி அங்கு செல்கிறார்.

இந்த விசிட் அவர் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? என்பது குறித்து ஆய்வு செய்யத்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!