’அப்பா இல்லாத பிறந்தநாள் எனக்கு இல்லை.. யாரும் என்னை பார்க்கவர வேண்டாம்...’ கலங்கித் தவிக்கும் அஞ்சா நெஞ்சன்..!

By Thiraviaraj RMFirst Published Jan 30, 2019, 4:15 PM IST
Highlights

இன்று அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரிக்கு பிறந்தநாள். ஆனால், ‘’'அப்பா மறைந்த கவலையிலிருந்து நான் மீளவில்லை. யாரும் என்னை பார்க்க வரவேண்டாம்’’ என தனது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

இன்று அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரிக்கு பிறந்தநாள். ஆனால், ‘’'அப்பா மறைந்த கவலையிலிருந்து நான் மீளவில்லை. யாரும் என்னை பார்க்க வரவேண்டாம்’’ என தனது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.ஜனவரி 30ம் தேதி மு.க.அழகிரிக்கு பிறந்த நாள். 1996 முதல் அவர் அரசியலில் கோலோச்சிய பிறகு அன்றைய தினம் தென் மாவட்டமெங்கும் கொண்டாட்டங்கள் தூள் பறக்கும். குறிப்பாக மதுரையே ரணகளப்படும். போஸ்டர்கள், பேனர்கள் வரவேற்பு கம்பளங்கள் என அவரது ஆதரவாளர்கள் விழா எடுத்து அசத்துவார்கள். ஒவ்வொரு பகுதியாக சென்று மு.க.அழகிரி திமுகவினரின் பாசமழையில் நனைவார். கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், மயிலாட்டம் என எல்லா ஆட்டங்களுக் மதுரையில் ஆடி தீர்க்கப்படும். பெண்கள் பால் குடம் எடுத்தும், முளைப்பாரி எடுத்து வரும் ஊர்வலம் கலைகட்டும்.

அழகிரியின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் நடக்கும். முருகன் கோவில், மாரியம்மன் கோவில்களில்தான் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்துவார்கள். சாரட்டு வண்டிகள் சரசரக்க முத்தாய்ப்பாக ராஜா முத்தையா மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்து வகையான அசைவ விருந்து வகைகளையும் தனது ஆதரவாளர்களுக்கு படைத்து விட்டு வீடு திரும்புவார் அழகிரி. மதுரையையே குலுங்க குலுங்க வைத்து பிறந்தநாள் கொண்டாடிய அழகிரி இப்போது கலங்கி கலங்கி தவிக்கிறார்.

அவரது 68வது பிறந்த நாள் இன்று. ஆனால், இன்றைய அழகிரி பிறந்த நாளில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. களையிழந்து கிடக்கிறது மதுரை. கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அழகிரி மதுரை வீட்டை விட்டு பெரும்பாலும் வெளியேறுவதே இல்லை. சில ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளான இன்று ‘’ அப்பா மறைந்த கவலையிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. அதனால், என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட விரும்பவில்லை. எங்கேயும் என்னை வாழ்த்தி விளம்பரங்கள் வைக்க வேண்டாம்.அதேநேரம், ஏழை எளியவர்களுக்குச் செய்யும் நலத்திட்டங்களை மட்டும் செய்யுங்கள். யாரும் என்னை பார்க்க வேண்டாம் என கட்டளையிட்டு அமைதி காத்து வருகிறார் அழகிரி. 

click me!