தமிழக பாஜக தலைமையிடத்தை 30 கோடிக்கு வாங்கிக் கொள்ள அழகிரி தயாரா..!! எல் முருகன் எடுத்த அதிரடி முடிவு..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2020, 6:27 PM IST
Highlights

ரூபாய் 30 கோடி என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்தார் என்று தெரியவில்லை. அவர் குறிப்பிட்டுள்ள படி ரூபாய் 30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம்.

தமிழக பாஜக தலைமை இடத்தை 30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ் அழகிரி தயாரா? என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு நெருக்கமான ஒருவருக்கு கட்டிடம் கட்ட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும். அதாவது,  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான மைதானத்தில் வணிக வளாகங்கள் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனவும் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த சொத்தின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனவும், காமராஜர் சொத்து அறக்கட்டளை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், ராஜீவ்காந்தி அறக்கட்டளை வழக்கை விசாரிக்கும் குழு தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துக்களின் விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் எனவும் எல்.முருகன் கூறியிருந்தார். 

 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயத்தை  பாஜகவினர் முக்தா  சீனிவாசனிடம் இருந்து எப்படி வாங்கினார்கள் என நான் சொல்லட்டுமா? ரூபாய் 30 கோடி மதிப்புள்ள சொத்தை 3 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார்கள் என பதிலடி கொடுத்தார். இந்நிலையில் தமிழக பாஜக  மற்றும் தமிழக காங்கிரஸார் இடையே சொத்து விவகாரம் கருத்து மோதலாக மாறியுள்ளது.  இந்நிலையில் கே.எஸ் அழகிரியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கி தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  அறக்கட்டளைக்கு சொந்தமான அனைத்து சொத்துகள் தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சிப்பதை சுட்டிக்காட்டிய காரணத்தினால், 

தமிழ்நாடு காங்கிரஸினுடைய தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக பாஜக தலைமை அலுவலகம் இயங்கும் இடத்தை ரூபாய் 30 கோடி மதிப்புள்ளது என்றும், அதை ரூபாய் 3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலையும் இப்போது இருக்கிற சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்தி பேசியிருப்பது அவர்  எத்தகைய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  ரூபாய் 30 கோடி என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்தார் என்று தெரியவில்லை. அவர் குறிப்பிட்டுள்ள படி ரூபாய் 30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர் வாங்கிக் கொள்ள தயாரா? மேலும் முக்தா சீனிவாசன் அவர்களின் மகன் முக்தா சுந்தர் முக்கிய பொறுப்பில் பாஜகவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தை வாங்கும் பொழுது முக்தா சீனிவாசன் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!