
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்ட அவருக்கு, கோபாலபுரம் வீட்டிலேயே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பார்க்க செல்ல வேண்டாம். டாக்டர்கள், கருணாநிதிக்கு ஓய்வு தேவை என கூறியுள்ளனர் என திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன், மதுரையில் இருந்து மு.க.அழகிரி சென்னை வந்தார். தந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்ததும், கோபாலபுரம் சென்று குடும்பத்தினரிடம் பேசினார். நீண்ட நாட்களுக்கு பின் தாய், தந்தையை பார்த்த மு.க.அழகிரி நீண்ட நேரம் பேசினார்.
இந்நிலையில் மு.க.அழகிரி, இன்று மதுரை செல்கிறார். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியை, கோபாலபுரம் வீட்டில் சந்தித்து பேசி கொண்டு இருக்கிறார். இதில், மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைக்கப்படுவார் என திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இன்று காலையில் மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். அதன் பிறகே, மு.க.அழகிரி கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த அழகிரி 'திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் சில விஷயங்கள் குறித்து தன்னுடன் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.