
ஆக்சுவலாக டபுள் சந்தோஷத்தில் இருக்கிறது அ.தி.மு.க. அந்த இரண்டு காரணங்களில் ஒன்று, பா.ஜ.க.வை தங்களின் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டது, மற்றொன்று, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று தனது மோஸ்ட் வான்டட் படமான ‘வலிமை’யை அஜித்குமார் ரிலீஸ் செய்வதுதான்.
சரி, அந்த நாளில் அஜித் படம் ரிலீஸாவதில் அ.தி.மு.கவினருக்கு ஏன் சந்தோஷம், அதிலென்ன லாபம் வந்துட போகிறது? என்று நீங்கள் கேள்விகளை அடுக்கலாம். அதை விளக்கும் அரசியல் பார்வையாளர் ஒருவர் “தமிழக சினிமாவை பொறுத்தவரையில் முக்கிய நடிகர்கள் ஏதோ ஒரு கட்சியின் அபிமானியாக தங்களைக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொள்வார்கள். அல்லது ஆளுங்கட்சியாக எது இருக்கிறதோ அதன் ஆதரவாளராக மாறிக் கொள்வார்கள். ஆனால் ரசிகர் மன்றங்களையே விரும்பாத அஜித்தோ இந்த ரகமில்லை. எல்லாவற்றிலும் தனித்து நிற்கும், எதிர்கொள்ளும் மனிதர்.
ஆனால் அவருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். காரணம், தனி பெண்ணாக இருந்து கொண்டு எவ்வளவு பெரிய அரசியல் சாம்ராஜ்யத்தை அடக்கி ஆண்டாரே, அரசியல் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டு வென்றாரே! என்று சிலிர்ப்பவர். அஜித்தின் திருமணத்துக்கு சென்ற ஜெயலலிதா வெகு நேரம் அங்கிருந்து அஜித்-ஷாலினியை வாழ்த்தினார். அதிலிருந்து அ.தி.மு.க.வினருக்கும் அஜித்தை பிடிக்கும், அஜித் ரசிகர்களுக்கு அ.தி.மு.க.வை பிடிக்கும்.
இதனால் தேர்தல் வரும்போதெல்லாம் அஜித் ரசிகர்களை தங்களுக்கு வாக்களிக்க சொல்லி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட அ.தி.மு.க.வினரும் கேட்டுக் கொள்வார்கள். அஜித் ரசிகர்களும் ஒத்துழைப்பார்கள்.
ஆனால் இடையில் எடப்பாடி காலத்தில் சற்றே இதில் மவுனம் காத்த அஜித் இதோ தி.மு.க.வின் எட்டு மாத கால ஆட்சிக்குப் பின் மீண்டும் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை மறைமுகமாக எடுத்துள்ளார். அதனால்தான் நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் தனது மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படத்தை கரெக்டாக ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். ஆக்சுவலாக அவரிடம் மூன்று நாட்களை கொடுத்து, அதில் ஒன்றை செலக்ட் பண்ண சொன்னாராம் தயாரிப்பாளர் போனிகபூர். அஜித் பிப்ரவரி 24, அம்மாவின் பிறந்தநாள் தேதியை டிக் செய்துள்ளார். இதிலிருந்து அஜித் மீண்டும் தங்களின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார் என்று சொல்லி, அஜித்தின் ரசிகர்களை உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க சொல்லியும், தேர்தல் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவும் தொடங்கிவிட்டனர் அதிமுக-வினர். இதற்கு அஜித் ரசிகர்களும் பல இடங்களில் ஒத்துழைப்பு கொடுக்க துவங்கியுள்ளனர்.
அஜித் ரசிகர்கள் மற்றும் அவர்களின் குடும்ப வாக்கு வங்கி தங்களுக்கு சாதகமாக இருப்பதால் இது ஒரு கூடுதல் பலம் என்றும், இதன் மூலம் பல இடங்களில் தாங்கள் வெற்றியை தட்டி தூக்கப்போகிறோம்! என்றும் கெத்து காட்ட துவங்கியுள்ளனர் அ.தி.மு.க.வினர்.
ஏற்கனவே விஜய் தன் இயக்கத்தினரை தனியாக களமிறக்கி தங்களுக்கு கடுப்பு கொடுப்பது போதாதென்று, அஜித் ரசிகர்களை அ.தி.மு.க. வளைப்பது தி.மு.க.வினரை கடுமையான கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.