ஊழல் வழக்கில் இருந்து தப்பிய அஜித் பவார் !! பாஜக தயவால் வழக்கில் இருந்து விடுவிப்பு !!

By Selvanayagam PFirst Published Dec 7, 2019, 8:08 AM IST
Highlights

விதர்பா நீர்பாசன திட்ட ஊழல் வழக்கிலிருந்து, மகாராஷ்டிரா முன்னாள் துணை முதலமைச்சரும் , தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவருமான அஜித் பவார், விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக, மகாராஷ்டிர லஞ்ச ஒழிப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.மகாராஷ்டிராவில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி அரசு, பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக, இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1999 முதல் 2014 வரை, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக அஜித்பவார் இருந்தார். அப்போது, விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்ற பெயரில் நாக்பூரில் அமல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டங்களில் ரூ. 70 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.


 
இதுதொடர்பாக கடந்த 2014-இல் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, லஞ்ச தடுப்புப் பிரிவு மூலம் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கால் அஜித் பவார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் வெளியான மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், பாஜக-வுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தங்களால் ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட அஜித்பவாரையே உடன் சேர்த்துக் கொண்டு, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது. 

இதற்கு பிரதி பலனாக  அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் தொடர்புடைய 9 வழக்குகள், அவசர அவசரமாக ரத்து செய்யப்பட்டன. இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பதவிக்காக பாஜக எந்த எல்லைக்கும் போகும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

இதனிடையே, நீர்ப்பாசன ஊழல் வழக்கில் அஜித் பவாரை குற்றமற்றவர் என்று மும்பை உயர் நீதிமன்றத்திலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. நவம்பர் 27  ஆம் தேதி  மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பிரமாணப் பத்திரத்தில், “நீர்ப்பாசன ஊழல் வழக்கில், அஜித் பவார் மீது சட்ட ரீதியாக எந்த தவறும் இல்லை. அதிகாரிகள் செய்த தவறுக்கு அஜித்பவார் பொறுப்பேற்க முடியாது; அவருக்கு முறைகேடுகளில் தொடர்பில்லை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது; எனவே, அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. 

இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், வழக்குப் போட்ட பாஜக-வை வைத்தே, அந்த வழக்குகளை திரும்பப் பெற வைத்து, சாமர்த்தியமாக தப்பியுள்ளதாக தெரிகிறது. 

click me!