மார்ச் 10 தேதி தெரியும்... அப்போ பாத்துக்கலாம்..பிரியங்காவை எச்சரித்த ஐஷ்வர்யா..

By Raghupati RFirst Published Jan 17, 2022, 5:54 AM IST
Highlights

சமூகம் உங்களை மன்னிக்காது. மார்ச் 10ஆம் தேதி அன்று தெரியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தியை எச்சரித்திருக்கிறார் குல்தீப் செங்காரின் மகள் ஐஸ்வர்யா.

2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் '2017-ம் ஆண்டில் தன்னை பா.ஜ.கவை சேர்ந்த எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்’ என உள்ளூர் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி.போலீசாரால் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திலும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2019 ஜூலை மாதம் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரின் வக்கீல் மற்றும் உறவினர்கள் ரேபரேலி நோக்கி காரில் சென்றனர். அப்போது, அந்த கார் மீது லாரி மோதியதில் இளம்பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர்.  அந்த இளம்பெண்ணும் அவரது வக்கீலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இதற்கும் குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளில் 2019 டிசம்பர் மாதம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் குல்தீப் சிங் செங்கார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குல்தீப் சிங் செங்கார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாஜக அரசுக்கு பெரும் கெட்ட பெயராக அமைந்தது. இதையடுத்து குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் பா.ஜ.க அறிவித்தது.

இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தயார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில்  குல்தீப் சிங்கின் மகள் ஐஸ்வர்யா உன்னாவ் தொகுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தொகுதியில் களம் இறங்குகிறார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், ‘அந்த வீடியோவில்,   பிரியங்கா காந்தி அவர்களே... நீங்கள் எடுத்த இந்த அரசியல் நடவடிக்கை நல்லதாக இருக்கலாம்.  

நீங்கள் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆஷா சிங் மீது மாற்று சான்றிதழ் , மதிப்பெண் பட்டியலை போலியாக தயாரித்தற்கான வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  அவர்களின் குடும்பத்தினர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  அவர்களை உன்னாவ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .  உன்னாவ் மக்களின் ஆசீர்வாதம் எனக்குத்தான் இருக்கிறது. சமூகம் உங்களை மன்னிக்காது. மார்ச் 10ஆம் தேதி இந்த முடிவை நீங்கள் பார்ப்பீர்கள்’ என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

click me!