அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு, முதல்முறையாக வரும் 7ம் தேதி நடைபெற இருந்த செயற்குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களாக வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் சட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வந்தது. இதனையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு ஒரு மனதாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளாரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயற்குழு கூட்டம்
இதனை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேத இநடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பதிலாக அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஒருசில காரணங்களால்,7.4.2023 - வெள்ளிக் கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
முறைகேடு புகார்.! ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை