திமுக அரசை கண்டித்து மதுரையில் திடீர் போராட்டம்.! அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி

By Ajmal Khan  |  First Published Dec 12, 2023, 12:59 PM IST

முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாத  திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 15 ஆம் தேதி நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 


துயரத்தில் வாடும் விவசாயிகள்

முல்லைப்பெரியாறு மற்றும் வகை அணையில் இருந்து தண்ணீர் திறக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீரை அணைகளில் இருந்து குறித்த காலத்தில் திறந்துவிடுவதற்கு விடியா திமுக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், விவசாயிகள் பெரும் துயரத்தில் வாடுகின்றனர்.

Tap to resize

Latest Videos

கழக ஆட்சிக் காலங்களில், மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் ஒருபோக விவசாயம் செய்து பயனடைந்து வந்தனர்.

அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காதது ஏன்.?

ஆனால், தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒருபோக விவசாயம் செய்வதற்கு விடியா திமுக அரசு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விடியா திமுக அரசிடமும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் பெரியதும் ஆதங்கப்படுகின்றனர்.

குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது. இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாத விடியா திமுக அரசைக் கண்டித்தும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 15.12.2023 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும்; மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்

பொதுமக்களுக்கு ஜாக்பாட்..! பொங்கல் பரிசு தொகை ரூ.1000 இல்லை அதை விட அதிகம்- எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்

click me!