AIADMK Split 2026: இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?

Published : May 13, 2026, 04:13 PM IST
EPS vs SP Velumani

சுருக்கம்

AIADMK Split 2026: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுக யார் வசம் செல்லப்போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

அதிமுக யார் வசம் செல்லும்?

தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவின் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது உறுதியானது. தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி Vs எஸ்பி வேலுமணி என மாறி உள்ளது. இந்த நிலையில் அதிமுக யார் வசம் செல்லும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பல பிளவுகளை சந்தித்த அதிமுக

அதிமுகவிற்கு பிளவு என்பது புதிது கிடையாது. 1987 ஆம் ஆண்டிலிருந்து அதிமுக பல பிளவுகளை சந்தித்து வருகிறது. எம்ஜிஆர் மறைவிற்குப் பின்னர் ஜெ.அணி, ஜா. அணி என பிரிந்த அதிமுக 1991 ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றாக இணைந்தது. அதன் பின்னர் 2016 இல் ஜெயலலிதா மறைந்த பின்னர் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, தினகரன் அணி என பல அணிகள் உருவாகின. ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்துவிட்ட நிலையில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடங்கி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மற்ற அனைவரும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் பயணித்து வருகின்றனர்.

தவெகவிற்கு ஆதரவளித்த எஸ்.பி வேலுமணி தரப்பு

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றதில் தொடங்கி இதுவரை நடைபெற்ற ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற பல முக்கிய தலைவர்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். சட்டமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவின் எஸ்.பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவளித்து அரசை காப்பாற்றியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியா? எஸ்.பி வேலுமணியா?

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவின் 22 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுகவை கைப்பற்றப் போவது யார்? எடப்பாடி பழனிச்சாமியா? எஸ்.பி வேலுமணியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் என்று இபிஎஸ் கையெழுத்திட்டு, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று 47 பேரும் உறுப்பினரானார்கள். சட்டசபை கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தவெகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டசபை கொறடா உத்தரவை மீறி தாவெகவிற்கு ஆதரவு அளித்ததாக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் முறையிடுவார்.

சபாநாயகருக்கு அதிக அதிகாரம்

ஆனால் இதற்கு முன் இந்தியாவில் பல மாநிலங்களில் சபாநாயகருக்கு அதிக அதிகாரம் இருப்பதாகவும் அவரது முடிவே இறுதியானது என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் கட்சி யார் கையில் செல்லும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எஸ்.பி வேலுமணி அணியில் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். கூடுதலாக ஏழு எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவேளை 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் மறுத்தால் எடப்பாடி பழனி நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே 25 எம்எல்ஏக்களின் எதிர்காலம் அமையும்.

அதிமுக யார் வசம் உள்ளது?

அதே சமயம் அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி வசமே உள்ளது. எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோர் தங்களிடம் கூடுதல் எம்எல்ஏக்கள் இருப்பதால் கட்சிக்கு உரிமை கோர வாய்ப்பு உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அதை எதிர்த்து போராடும் வாய்ப்பும் உள்ளது. எனவே இவர்கள் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உதவியை நாடலாம். இறுதி முடிவு என்பது நீதிமன்ற உத்தரவையும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளையும் பொறுத்திருக்கும். அதிமுக பிளவு உறுதியாகி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வசமிடமே அதிமுக இருக்கிறது. அவர் என்ன செய்யப் போகிறார். தவெகவை ஆதரித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வாரா? அல்லது சட்ட ரீதியான வழிகளை ஆராயப்போகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK VIJAY: பெரும்பான்மை கொடுத்த தைரியம்.! போலீசாருக்கு முழு அதிகாரம்.! ஜெயலலிதா பாணியில் அடித்து விளையாட போகும் முதல்வர் விஜய்.!
Ricky Radhan Pandit: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழங்கிய ஒற்றை பெயர்..! யார் இந்த ராதன் பண்டிட்?