கொலுசா.. ஹாட்பாக்ஸா.. உங்களுக்கு எது வேணும்..? எஸ்.பி வேலுமணியை கடுப்பாக்கிய செந்தில் பாலாஜி !!

By Raghupati RFirst Published Feb 18, 2022, 6:00 AM IST
Highlights

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து முடிந்து தற்போது, ஓய்ந்துள்ளது. கோவை மாநகராட்சியை யார் ? கைப்பற்ற போவது என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக கோவையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான பாஜக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான். 

கோவையை அதிமுகவின் கோட்டையாகவும் மட்டுமல்லாமல் தன்னுடைய கோட்டையாகவும் நிறுவி திமுகவுக்கு சிம்மசொப்பனமாக வலம் வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. இதனால், திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் வெற்றி பெற்று திமுக ஸ்வீப் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிட ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் என பொறுப்பாளர்களை நியமித்தார். 

இந்த நடவடிக்கைக்கு நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உடனடி பலன் கிடைத்தது. இதே போல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொங்கு பகுதியை திமுக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளையும் அமைச்சர்களையும் முடுக்கி விட்டுள்ளார்.

அதிலும் எஸ்.பி. வேலுமணியின் கோட்டையாக உள்ள கோவைக்கு, திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்துள்ளார்.  அவர் கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சிப் பணி செய்யவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்யவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் என்பதால் அதிமுக அமைப்பில் உள்ள பலம், பலவீனம், அதோடு அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளுடன் நெருங்கி பேச முடியும் என்பது பெரிய பலமாக அமைந்துவிட்டது. கோவையை யார் கைப்பற்றுவது என்று எஸ்.பி வேலுமணி தரப்பும் சரி, செந்தில் பாலாஜி தரப்பும் சரி போட்டிபோட்டுக் கொண்டு வேலை செய்வதால் ‘ஹாட்’ வெப்பத்தில் தகிக்கிறது கோவை மாநகராட்சி. 

இந்நிலையில், அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான வேலுமணி தற்போது ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘அதிமுக ஆட்சியில் காவல்துறை என்றாலே பொதுமக்களின் நண்பன் என்ற உன்னத நிலைக்கும், கௌரவத்திற்கும் மக்களிடம் கொண்டு சேர்த்தது அதிமுக அரசுதான். ஆனால் இன்று குற்றவாளிகளை தண்டிக்கும் பணிகளில் ஈடுபடவேண்டிய காவல்துறை, குறவாளிகள் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்தும் தகவல் கொடுப்பவர்களை தேடிசென்று வழக்கு போடுவதும் கைதுசெய்வது போன்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.

இது ஜனநாயக நாட்டில், நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், பாதுகாபின்மை சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நேர்மையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் அப்படி நடந்து கொள்கிறதா என்ற ஒரு சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. காரணம் இதுவரை கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற கொலுசு, ஹாட்பாக்ஸ் உட்பட எத்தனை இலட்சம் மதிப்புடைய பொருடகள் கைப்பற்றபட்டுள்ளது என்றோ, முறைகேட்டில் ஈடுபட்ட எத்தனைபேர் கைது செய்யப்பட்டார்கள் என்றோ எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதனால், தற்பொழுது நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் நியாமாக நடைபெறுவதற்கு மத்திய துணை இரானுவ படையினரை வைத்து இந்த தேர்தலை பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டும். மேலும் மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் இறையாண்மையையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது பனிவான வேண்டுகோள் என விடுத்துள்ளார். இரு கட்சிகளும் வாக்காளர்களை வழக்கத்தை விடவும் செமையாக கவனிப்பதால் மொத்தத்தில் கோவை வாக்காளர்கள் படுகுஷியில் இருக்கிறார்கள்.

click me!