தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி... பாஜக துணைத் தலைவர் அண்ணமலை தாறுமாறு கணிப்பு..!

By Asianet TamilFirst Published Apr 28, 2021, 9:17 PM IST
Highlights

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். பாஜக பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக துணைத் தலைவரும் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு இன்று வந்திருந்தார். அங்கு அரவக்குறிச்சி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, சிசிடிவி கண்காணிப்பு அறையை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையம் நேர்மை, நியாயமாக மட்டுமல்ல சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் கூறிய அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் முழுமையாகக் கடைப்பிடிப்போம். அரவக்குறிச்சி தொகுதி மட்டுமல்ல, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையப்போவது நிச்சயம் உறுதி. ஏப். 29-ஆம் தேதி தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் வெளிஉயாகும். அதிலேயே ஓரளவு முடிவுகள் தெரியும். இந்தத் தேர்தலில் பெண்கள் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெண்களின் மனவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் பெண்களின் மனவோட்டத்தை ஓரளவு சரியாகக் கணித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். எனது கணிப்பின்படி அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும்.

20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைவோம். தேர்தல் வரை கொரோனா இரண்டாம் அலை பெரிய அளவில் ஏற்படவில்லை. அதன்பிறகே வேகம் எடுத்தது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். எல்லோருமே தயங்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 10,000 பேரில் 4 பேர் என்ற அளவில்தான் கொரோனா தொற்று ஏற்படுகிறது. எனவே, தடுப்பூசி போடுவதில் அரசியல் எதுவும் வேண்டாம். கொரோனா முழுமையாக விலகிய பிறகு அரசியலை வைத்துக் கொள்வோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

click me!