AIADMK : "கவலைப்படாதீங்க.." நாங்க இருக்கோம்..என்னமா சொல்லிருக்காருய்யா ஓபிஎஸ் !!

By Raghupati RFirst Published Feb 23, 2022, 12:02 PM IST
Highlights

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவந்தது. பின்னர் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 60.07% வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகளும் பதிவானது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது.


அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பண்ணீர்செல்வம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில், 'தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளுங்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் நூறு விழுக்காட்சி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும்.

ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குகிறது.

அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - தர்மமே மறுபடியும் வெல்லும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும். அதிமுக மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும்' என்று கூறியுள்ளார்.

click me!