நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை பலப்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவை தொடர்ந்து புதிய தமிழக தலைவர் கிருஷ்ணசாமியை அதிமுக தொகுதி பங்கீட்டு குழு சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
நடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியுடன் தொகுதி பங்கீட்டை விரைவுப்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொமதேகவிற்கு ஒரு தொகுதியில் வழங்கியுள்ளது. மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. இரண்டு கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்பதால் சிக்கல் உருவாகியுள்ளது. அதே போல காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை.
கூட்டணி பேச்சு இழுபறி
இந்தநிலையில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக தனது அணியை பலப்படுத்த அரசியல் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமக மற்றும் தேமுதிகவிடம் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக நடைபெறவுள்ளது. பாமகவிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாநிலங்களவை எம்பி கட்டாயம் வேண்டும் என பிடிவாதத்தில் இருப்பதால் உடன்பாடு ஏற்படாத நிலை உள்ளது. இந்தநிலையில் பாஜக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தற்போது அதிமுக பக்கம் திரும்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியை பாஜகவிடம் கிருஷ்ணசாமி எதிர்பார்த்தார்.
உறுதியானது புதியதமிழகம் கூட்டணி
ஆனால் பாஜகவே அந்த தொகுதியில் போட்டியிட இருப்பதால் கிருஷ்ணசாமி அதிமுக பக்கம் சென்றுள்ளார். கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கிருஷ்ணசாமி சந்தித்து பேசியிருந்தார். இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் கிருஷ்ணசாமியை அதிமுக தொகுதி பங்கீட்டு குழு சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின் போது புதிய தமிழகத்திற்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதி தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் விரைவில் இரு தரப்பு தொகுதி பங்கீட்டு குழு ஆலோசித்து கூட்டணி மற்றும் முடிவுகளை அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்