மீனவர்கள் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிற்காமல், செயலில் இறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நேற்று ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தத்துடன் அவர்களின் 8 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதுடன், தொலைபேசி வாயிலாகவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த சம்பவத்தை கண்டித்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.
undefined
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டினார்கள் என்ற காரணத்தைச் சொல்லி அடிக்கடி அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டு மீனவர்கள் இடையே ஒருவித அச்ச உணர்வையும் ,அமைதியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக ஒவ்வொரு முறையும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் போது, ஒருவித அச்ச உணர்வோடு தான் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஏதோ சம்பிரதாயத்திற்காக கடிதம் எழுதுவது அல்லது தொலைபேசியில் பேசுவது என்ற பணியை தமிழ்நாடு அரசு செய்து கொண்டு இருக்கிறதே தவிர, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து ,இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலத்திலாவது நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை.
தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது மற்றும் மீன்பிடி உரிமையை காப்பது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு இருக்கிறது. இந்த கடமையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்கவும், உடைமைகளை அவர்களிடம் ஒப்படைக்கவும் ,இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் ,உரிய நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அறிக்கையில் கூறியுள்ளார்.