அறிவாலயத்திற்கே போன அதிமுக எம்.பி.. கனிமொழிதான் என் குரு.. ஆடிப்போன ஸ்டாலின்..

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2022, 1:53 PM IST
Highlights

திமுக அதிமுக மோதல் வெறுப்புப் பிரச்சாரம் என்பதையும் தாண்டி எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை கேட்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.   இது ஜனநாயகத்தின் பண்பட்ட நிலை என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில்தான் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரை புகழ்ந்து பேசியுள்ளார்.

மாநிலங்களவையில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும் என பல விஷயங்களை தனக்கு கற்றுக் கொடுத்தவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன் தான் என அதிமுக எம். பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதிமுக திமுக அரசியல் களத்தில் கீரியும் பாம்பும்மாக, எலியும்- புலியுமாக, எதிர் எதிர் துருவத்தில் கலமாடி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

தேசிய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக பின்னாளில் அதிமுக திமுகவே தமிழகத்தில் தலையெழுத்தாக மாறிவிட்டது. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் மூலம்  திமுக காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்தது. அண்ணா முதலமைச்சர் ஆனார், அவர் உடல்நலக்குறைவால் காலமாக கருணாநிதி முதல்வரானார். அதுவரை தனது நடிப்பாலும், பேச்சாளும் திமுகழகத்தை  வளர்த்து வந்த எம்ஜிஆர், கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 1972 ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி  திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு அதிமுக என்ற கட்சியை உருவாக்கினார் எம்ஜிஆர்.

அன்று முதல் தமிழகத்தில் இருதுருவ அரசியல் நடந்து வருகிறது. கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தை அதிமுக திமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. எம்ஜிஆரை காட்டிலும் திமுகவை கடுமையாக எதிர்த்து தொண்டர்களின் ஏகோப்பித்த ஆதரவை பெற்றவராக கால் நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்தார் செல்வி ஜெயலலிதா. அவரின் தலைமையிலான அதிமுக ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்டது என்றே கூறலாம், திமுகவுக்கும் அதிமுகவுக்குமான எதிரெதிர் கருத்தியல் அரசியல், ஒருகட்டத்தில் பகை அரசியலாகவே மாறியது. சட்டமன்றத்தில் கூட அதிமுக உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்களை பார்த்து பேசவோ அல்லது புன்னகைக்கவோகூட அஞ்சும் நிலை இருந்தது. திமுகவுக்கும்- அதிமுகவுக்கும் இடையே இறுக்கமான சூழ்நிலையையே உருவாக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா என்றே கூறலாம். அந்த அளவுக்கு திமுக கருணாநிதி விவகாரத்தில் கடுமையும் கண்டிப்புடனும் அவர் நடந்து கொண்டார்.ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அந்த நிலை  தலைகீழாக மாறியுள்ளது. சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலினை அதிமுக உறுப்பினர்களே பாராட்டும் அளவிற்கு சூழல் சுமுகமாக இருக்கிறது, குறிப்பாக சீனயரான செங்கோட்டையன் போன்றேரே பாராட்டும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நவநீதகிருஷ்ணன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவாலயத்திற்கே சென்று பாராட்டிப் பேசியுள்ளார். இதேபோல் சமீபகாலமாக தமிழக அரசு அமைக்கும் குழுக்களில் அதிமுகவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் நிலை இருந்து வருகிறது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அரசுக்கு ஆலோசனை வழங்கும் வல்லுனர் குழுவில் இடம்பெற்றார் .அதேபோல மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் ஓபிஎஸ்சின் மகனும் அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

திமுக அதிமுக மோதல் வெறுப்புப் பிரச்சாரம் என்பதையும் தாண்டி எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை கேட்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.   இது ஜனநாயகத்தின் பண்பட்ட நிலை என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில்தான் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரை புகழ்ந்து பேசியுள்ளார்.அதாவது திமுக செய்தி தொடர்பு செயலாளரும், எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன் உட்பட மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். 

திருமண விழாவில் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் மேடையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, திருமண விழாவில் என்னுடைய மேடை பேச்சு சரியாக இருக்காது. அதுவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முன்னிலையில் பெரிய ஹீரோவாக இருக்க விரும்பவில்லை, மாநிலங்களவைக்கு நான் சென்றபோது பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன். அந்த வகையில். டிகேஎஸ், டி.கே.ரங்கராஜன், கனிமொழி எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். 

ஒரு முறை மத்திய அமைச்சருடன் விவாதித்தபோது அனுபவம் இல்லாத காரணத்தால் சண்டை போடும் நிகழ்வு நடந்தது. அப்போது சகோதரி கனிமொழி அவர்கள் பொறுமையாக இருங்கள் நான் பேசுகிறேன் என்று சொன்னார். நான் சர்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் கனிமொழி கவனமாக இருந்தார். பாராளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதையும் கனிமொழி எனக்குக் கற்றுக் கொடுத்தார் என தெரிவித்தார். ஆர்எஸ் பாரதியும் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் என தெரிவித்தார். நவநீதி கிருஷ்ணனின் இந்த பேச்சு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அங்கிருந்த திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 
 

click me!