அம்மாவின் பாராட்டுப் பத்திரம் மட்டுமே போதும்... ஓபிஎஸ் - இபிஎஸ்-க்கு அதிமுக எம்.பி. சுளீர் பஞ்ச்...

By Asianet TamilFirst Published Jan 29, 2019, 3:00 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான எந்தப் பணியிலும் ஈடுபடுத்தாததால், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான எந்தப் பணியிலும் ஈடுபடுத்தாததால், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். 

இதுதொடர்பாக மைத்ரேயின் தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். அதில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த கடந்த 23ம் தேதி அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை.

அதிமுகவில் 1999ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் ஜெயலலிதா என்னை சேர்த்து இருந்தார். 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன். 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது. 

மாநில, தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி ‘வளமான இந்தியாவிற்கான செயல் திட்டம்’ என்ற தலைப்பில் அந்தத் தேர்தல் அறிக்கை தயாரானது. ஜெயலலிதா 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார். அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்தத் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதா திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

தேர்தல் அறிக்கையின் விவரங்களை படக்காட்சி மூலம் விளக்க வேண்டும் என்று கூறப்பட்டபோது, "இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான் சரியாக இருக்கும்"என்று ஜெயலலிதா உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் எனக்கு இது தெரிவிக்கப்பட்டது. நானும் ஒரு மணிக்கும் மேலாக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையைப் படக்காட்சி மூலம் விளக்கியது அதுதான் முதல் தடவை. 

அடுத்த நாள் காலை ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான நிலையத்தில் ஜெயலலிதாவை வழியனுப்ப வந்திருந்தோம். ஜெயலலிதாவின் கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார்.  "மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்" என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி சென்றார். இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும். 

இவ்வாறு முகநூல் பக்கத்தில் மைத்ரேயின் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்புக்கு பிறகு “அணிகள் இணைந்துவிட்டன; மணங்கள்...” என்று அதிமுகவில் உள்ள ஒற்றுமையின்மையை மைத்ரேயின் குறிப்பிட்டிருந்தார். தற்போது தான் எந்தக் குழுவிலும் சேர்க்காதது பற்றி தனது அதிருப்தியை மைத்ரேயன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

click me!