
பொதுமக்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் வேளையில், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் அரசு பேருந்தை இயக்கி வருவதை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று மீண்டும் குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இப்போது முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிவிட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் இன்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவை இல்லாத காரணத்தால், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களை நாடி செல்கின்றனர். ஆனாலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.
இதனால், மக்கள், கால் டாக்சி, ஆட்டோ, மெட்ரோ ரயில் என தேடி செல்கின்றனர். இந்த சமயம் பார்த்து ஆட்டோ, கால் டாக்சி, பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருகிறது.
இந்த நெருக்கடியை சமாளிக்க, தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பணிமனைகளில் இருக்கும் பேருந்துகளை இயக்க தற்காலிக ஊழியர்கள் தேவை என போர்டு வைத்துள்ளது. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் வைத்துள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தை சமாளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் அரசு பேருந்தை இயக்கி வருகிறார்.
அதிமுக எம்.எல்.ஏ.வான ராஜகிருஷ்ணன், ஈரோட்டில் இருந்து அந்தியூர் வரை அரசு பேருந்தை இயக்கி வருகிறார். பேருந்தை இயக்குவதற்கு முன்னதாக இவர், தனது ஓட்டுநர் உரிமத்தை காவல் துறையிடம் காண்பித்துவிட்டு பேருந்தை இயக்கி வருகிறார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் வேளையில், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் பேருந்தை இயக்கி வருவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.