
சாமியே அரசியலுக்கு வந்தாலும், முழுசா நல்லது பண்ண முடியாது என்றும், நம்மள படைச்ச பிரம்மாவே வந்தாலும் இப்படித்தான் அரசியல் இருக்கும் என்றும் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியிடவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என்று ரஜினி கூறியுள்ளார். அதற்கு இன்னும் 3 வருஷம் இருக்கு. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து இன்றைய அறிவிப்பின்போதே கட்சி பெயர் என்ன? கொடி போன்றவற்றை இன்றைக்கே அறிவிச்சிருக்கணும். ஆனால் அறிவிக்கவில்லை. அவர் இப்பவும் ஏமாத்து வேலையத்தான் பண்ணிட்டு இருக்காரு என்றார். ரஜினி தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. அரசியலுக்கு வர்றதுன்னு முடிவு பண்ணிட்டா, உள்ளாட்சி தேர்தலிலேயே போட்டியிடலாமே. எதுக்காக தள்ளிப்போட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இவரு மட்டுமல்ல, அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா எல்லாருமே நல்லது பண்ணணும்தான் அரசியலுக்கு வர்றாங்க. ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில ஓட்டு குறையுது என்றார். சாமியே அரசியலுக்கு வந்தாலும் முழுசா நல்லது பண்ண முடியாது. நாம வேண்டியது நடக்கவில்லை என்றால் உடனே வேற சாமிய கும்பிடுறோம்.
நான் எம்.எம்.ஏ.வான பிறகு, நிறைய நல்லது செய்யணும்னு நினைச்சேன். ஆனா ஒன்னும் பண்ண முடியவில்லை என்ற கனகராஜ், யாரு அரசியலுக்கு வந்தாலும், அரசியல் நிலவரம் சரியில்லன்னுதான் சொல்வாங்க என்றார்.
ஆளுங்கட்சிய எதிர்கட்சி, குற்றம் சொல்றதும்; எதிர்கட்சிய ஆளுங்கட்சி திட்றதும் இயல்பானதுதான் என்ற அவர், யார் அரசியலுக்கு வந்தாலும், அரசியல் இப்படித்தான் இருக்கும். நம்மள படைச்ச பிரம்மாவே வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்றார் கனகராஜ் எம்.எல்.ஏ,.