ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தீர்மானம் கொண்டு வர முடியாது..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக வழக்கறிஞர்

By Ajmal KhanFirst Published Jun 20, 2022, 12:10 PM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டு வரமுடியாது என அதிமுக வழக்கறிஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவிஏற்றுக்கொண்டார். சில நாட்களிளேயே  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்டதால் அதிமுக பொதுக்குழுவில் ச்சிகலாவிற்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு கட்சியின் அதிகாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் இரட்டை தலைமை மீது பழி சுமத்தப்பட்டது. அதிமுகவில் இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம்  நிறைவேற்ற இபிஎஸ் தரப்பு தீவிர முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்க்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது. 

ஒற்றை தலைமை தீர்மானம் செல்லுமா?

ஒற்றை தலைமை தொடர்பாக தனிப்பட்ட முறையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்றும், இரண்டு பேரும் இணைந்து தீர்மானம் கொண்டு வந்தால் மட்டுமே தீர்மானம் செல்லும் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில்  ஒற்றை தலைமை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி அவ்வாறு தீர்மானம் கொண்டு வர இயலாது என அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் திருமாறன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று இருந்த விதியை மாற்றி, அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். அந்த வகையில் அவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள் உள்ளது. செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு வரும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற முடியுமே தவிர அதில் மாற்றங்கள் செய்ய முடியாது எனவும், தெரிவித்தார். 

ஓபிஎஸ் முடிவு என்ன?

பொதுக்குழு அன்று ஒற்றை தலைமை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி தனி தீர்மானம் கொண்டு வந்து ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யவோ வேறு ஒருவரை நியமனம் செய்யவோ விதிகளில் இடமில்லை என தெரிவித்தார். ஒற்றை தலைமை ஏற்படுத்த வேணும் என முடிவானால் அது ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் ஒப்புதலோடு அவர்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். அவர்கள் தங்கள் பதவி காலத்தை குறைத்துக்கொள்ள வேண்டும், அதனை தேர்தல் ஆணையத்துக்கு முறைபடி அறிவிக்க வேண்டும், புதிய பதவிக்கு தேர்தல் அறிவிக்க வேண்டும். அடிப்படை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால தலைவர்களாக இருவரும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே எடப்பாடி பழனிசாமி பக்கம் 50க்கும் மேற்பட்ட  அளவிலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருந்தாலும் ஓபிஎஸ் நினைத்தால் மட்டுமே ஒற்றை தலைமைக்கு முடிவு கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இருந்த போதும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது போல் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறிகின்றனர்.


இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவில் புகார்..? ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக பாய்ந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்

click me!