அதிமுக கூட்டணி தான்.. வேறு வாய்ப்புகள் இல்லை.. நிர்வாகிகளிடம் ரகசியம் உடைத்த ராமதாஸ்..!

By Selva KathirFirst Published Nov 24, 2020, 11:18 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக கூட்டணியை விட வேறு சிறந்த வாய்ப்பு பாமகவிற்கு இல்லை என்று நிர்வாகிகள் சிலரிடம் ராமதாஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக கூட்டணியை விட வேறு சிறந்த வாய்ப்பு பாமகவிற்கு இல்லை என்று நிர்வாகிகள் சிலரிடம் ராமதாஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சென்னை வந்து சென்றார். கூட்டணி கட்சிகள் என்கிற முறையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளுக்கு அமித் ஷாவை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை கூறி பாமக மற்றும் தேமுதிக அமித் ஷாவை சந்திப்பதை தவிர்த்துவிட்டன. இதனால் பாஜகவுடனான கூட்டணியை பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் விரும்பவில்லையோ என்கிற சந்தேகம் எழ ஆரம்பித்தது.

மிக முக்கியமாக கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக சென்று சேர்ந்தது பாமக தான். எனவே சட்டப்பேரவை தேர்தலில் பாமக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று அந்த கட்சி தொண்டர்களே காத்துக் கொண்டிருந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியின் மிக முக்கிய தலைவர் சென்னை வந்திருந்த போது அவரை பாமக சார்பில் யாரும் சென்று பார்க்காதது ஒரு வேளை கூட்டணியை பாமக விரும்பவில்லையோ என்று அக்கட்சி தொண்டர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி நிலைப்பாட்டிற்கு ஏற்பவே அதற்கான பணிகளை நிர்வாகிகளால் தொடங்க முடியும். ஆனால் தற்போது வரை கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக ராமதாஸ் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் அண்மையில் கூட்டணி தொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரை அழைத்து ராமதாஸ் பேசியதாக கூறுகிறார்கள். அப்போது தமிழகத்தில் பாமகவிற்கான கூட்டணி வாய்ப்புகள் தொடர்பாகவே பேச்சு நீண்ட நேரம் சென்றதாக சொல்கிறார்கள்.

தனித்து போட்டியில்லை என்கிற முடிவில் ராமதாஸ் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். திமுக கூட்டணிக்கு சென்றால் நிச்சயம் முதுகில் குத்துவார்கள் என்பதை நிர்வாகிகள் மட்டும் அல்ல ராமதாசும் உணர்ந்து வைத்திருப்பதாக கூறுகிறார்கள். மேலும் திமுக – பாமக கூட்டணியை இரண்டு கட்சிகளின் தொண்டர்களுமே ஏற்க வாய்ப்பில்லை என்றும் பேசப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாமக தொண்டர்கள் நிச்சயம் திமுகவுடனான கூட்டணியை ஏற்கமாட்டார்கள் என்று மூத்த நிர்வாகிகள் கூறியதை ராமதாசும் ஏற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் தமிழகத்தில் வலுவான 3வது அணிக்கும் தற்போது வாய்ப்பு இல்லை. எனவே திமுக அல்லது அதிமுக கூட்டணியை தவிர பாமகவிற்கு வேறு வாய்ப்பில்லை. அதிலும் திமுகவுடன் சென்று கூட்டணி பேசி தொகுதிப்பங்கீட்டை முடித்து தேர்தல் பிரச்சாரம் என்பதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிற ரீதியில் ராமதாஸ் பேசியதாகவும் கூறுகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது என்கிற ஒரே ஒரு நெருக்கடியை தவிர அந்த கட்சியுடன் கூட்டணியை தொடர்வதில் பாமகவிற்கு எந்த சிக்கலும் இல்லை என்றே ராமதாஸ் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வென்றுள்ளதால் சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி தோல்வியை சந்திக்கும் என்று உறுதியாக கூற முடியாது என்பதால் அதிமுக கூட்டணி தான் தற்போதைக்கு பாமகவிற்கு குட் சாய்ஸ் என்று ராமதாஸ் கூறியதாகவும் அதன் அடிப்படையில் தான் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் பாமக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

click me!