
திமுகவை வலுவான ஒரு எதிர்கட்சியாக எதிர்க்க வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமை அவசியம் என்கிற குரல் மறுபடியும் அதிமுகவில் எழ ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பும் சரி பின்னரும் சரி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை வெளிப்புறமாக ஓங்கியிருப்பது போல் தெரிகிறது. ஆனால் உண்மையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட அதிகாரம் ஓபிஎஸ்க்கே இருப்பதாக சொல்கிறார்கள். தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தன்னை வெளியே அறிமுகம் செய்து கொண்டாலும் பொருளாளர் என்கிற பவர் புல் பதவியும் அவரிடம் தான் உள்ளது. அதாவது அதிமுகவின் வரவு செலவை நிர்வகிக்கும் அதிகாரம் ஓபிஎஸ்சிடம் தான் உள்ளது.
இதே போல் வேட்பாளர் தேர்வு போன்ற விஷயங்களிலும் ஓபிஎஸ் ஒப்புதல் இபிஎஸ்சுக்கு தேவைப்படுகிறது. ஏனென்றால் தேர்தல் ஆணையம் இருவரின் கையெழுத்துகளும் சேர்ந்து இருந்தால் தான் வேட்பாளரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும். இது போன்ற விஷயங்களால் என்ன தான் எடப்பாடி பழனிசாமி ஆக்டிவாக இருந்தாலும் எதிர்கட்சித்தலைவராக தன் விருப்பத்திற்கு செயல்பட முடியாது என்கிறார்கள். மேலும் ஓபிஎஸ் ஏதேனும் சிறிய தகவலை எதிர்மறையாக கூறினாலும் அது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
அடுத்த தேர்தலுக்குள் கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். இதற்கு காரணம் கட்சியின் நிர்வாகிகளிடம் இருந்து அவருக்கு கிடைத்துள்ள ஆதரவு தான் என்கிறார்கள். கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்கள் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. ஆனால் காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் ஆதரவாளராக இல்லை என்றாலும் கூட எடப்பாடியையும் வெளிப்படையாக ஆதரிக்க தயங்குகிறார்கள்.
அதே சமயம் தற்போது தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்து கொண்டிருக்கின்றனர். இதே போல் காவிரி டெல்டாவிலும் தனக்கென ஆதரவு வட்டத்தை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதற்கிடையே கொங்கு மண்டலஅதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றைத் தலைமை என்பதை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக பொதுக்குழு இந்த வருடம் கூறும் போது கட்சிக்கான பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கவும் ஏற்பாடு நடைபெறுவதாக சொல்கிறார்கள்.
இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு கட்சியை நீண்ட நாட்கள் வழி நடத்த முடியாது என்பதால் ஒற்றைத் தலைமை என்கிற குரல் எடப்பாடி பழனிசாமியையும் யோசிக்க வைத்துள்ளதாக கூறுகிறார்கள். காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களை சரி செய்துவிட்டால் பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என்பது எடப்பாடியாரின் கணக்கு. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை பொதுச் செயலாளர் தேர்வு என்பது போட்டியின்றி இருக்க வேண்டும். போட்டி என்று வந்துவிட்டால் வெறும் நிர்வாகிகள் கூடி அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்துவிட முடியாது.
அதிமுகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் நடத்தி அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை வாக்களித்து தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். சுமார் ஒரு கோடி தொண்டர்கள் இருக்கும் அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தினால் அது ஒரு மினி சட்டப்பேரவை தேர்தல் போல் இருக்கும். ஆனால் கட்சியை கைப்பற்ற இது தான் வழி என்றால் அதற்கும் எடப்பாடி தயாராகவே இருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எடப்பாடி இப்படி ஒரு முடிவெடுத்தால் ஓபிஎஸ்சும் மோதிப்பார்த்துவிடுவார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.