அதிமுக ஆட்சியில் மருத்துவமனையை மேம்படுத்துவதாக கூறி பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்தால் அதிமுக திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
மருத்துவமனை - பெயர் பலகை மட்டுமே வைத்தார்கள்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய கந்தர்வக்கோட்டை அதிமுக சட்டமன்ற சின்னத்துரை, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 8 ஆண்டுக்கு முன்பு தரம் உயர்த்தியபோதே கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் மருத்துவமனை தரம் உயர்த்தப்படுவதாக கூறி பெயர் பலகையை மாற்றினார்களே தவிர , மருத்துவமனைகளின் கட்டமைப்பை உயரத்தவில்லை என கூறினார்.
அதிமுக- திமுக மோதல்
இதையடுத்து அவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுப்பட்டனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கேள்வி நேரத்தில் குற்றம்சாட்டக்கூடாது என்ற மரபை அமைச்சர் சுப்பிரமணியன் மீறிவிட்டதாக கூறினார். அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனவே பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டதாக கூறுவது தவறு என்றும், எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினால் ஆதாரங்களுடன் விவாதம் நடத்த தயார் என விஜயபாஸ்கர் வாதிட்டார்.
பட்டியலை தர தயார்
அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவ பணி இடங்களையும் உருவாக்காமல் 130 மருத்துவமனைகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தரம் உயர்த்தி உள்ளனர். ஆனால் அந்த 130 மருத்துவமனைகளின் பட்டியலை தருகிறேன், அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை நியமித்துள்ளார்களா என அவரே ஆய்வு செய்து விவாதிக்கலாம் என கூறினார். இதன் காரணமாக தமிழக சட்ட பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்