நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன். உள்நோக்கம் இல்லாமல் என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் நான் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார்.
உதயநிதியை விமர்சித்த குமரகுரு
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திநலையில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் தெரிகிறது.
undefined
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் துறையினர் குமரகுரு மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகர திமுக சார்பில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுருவை கண்டித்து திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் அதிமுக மாவட்ட செயலாளர் உருவப்படத்தை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினர் போராட்டம்
மேலும் குமரகுரு வீடு உளுந்தூர்பேட்டையில் உள்ளதால் திமுகவினர் குமரகுருவின் வீட்டை தாக்க வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலையடுத்து குமரகுரு வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் குமரகுரு சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்,
வாய் தவறி பேசிவிட்டேன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், மாண்புமிகு அண்ணன், புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க 19.9.2023 செவ்வாய் அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன். உள்நோக்கம் இல்லாமல் என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் நான் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.