அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ்... இன்னும் என்ன அண்ணாமலையே சொல்லிட்டாரு... விவரம் உள்ளே.

By Ezhilarasan BabuFirst Published Jul 1, 2022, 9:05 PM IST
Highlights

தமிழகம் வருகை தரும் தமக்கையார் திருமதி திரௌபதி முர்மு அவர்களை வரவேற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டுளார்

தமிழகம் வருகை தரும் தமக்கையார் திருமதி திரௌபதி முர்மு அவர்களை வரவேற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டுளார், இதனால் இந்த அறிக்கை கவனம் பெற்றுள்ளது. 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-  நம் அனைவரின் பேரன்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் முக்கியமான நடவடிக்கைகளில் முன்னுரிமை பெறுவது பழங்குடியினரின் மேம்பாடு மற்றும் அவர்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஆகும். இதுவரை கடந்து வந்த எட்டு ஆண்டுகால பாதையில் நாடு கண்ட நன்மைகள் பல, அதை சுருங்கச்சொன்னால் நிரந்தரமான சீரான வளர்ச்சி, நிலையான சமூகநீதி, நிம்மதியான சமூக பாதுகாப்பு, மக்களுக்கு உறுதி செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வார்.. தீபாவளிக்கு சொல்லமாட்டார்! முதல்வரை சீண்டிய தமிழிசை

மேலும் இந்த எட்டு ஆண்டுகளில் தாய்மார்கள் பெண்மக்கள் மற்றும் பெண் குழந்தைகள் என அனைத்து சகோதரிகளையும் தகுதிப்படுத்திக் மேம்பாடு அடையச் செய்வதற்கான அனைத்து உறுதுணையான நடவடிக்கைகளும் மத்திய அரசின் சார்பில் அர்ப்பணிப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்டது.

பழங்குடியின சமூகத்திலிருந்து திரௌபதி அவர்களை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பொது நோக்கில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்குமான வாய்ப்புகள் பற்றிய பாஜகவின் தொலைநோக்குப் பார்வையை, தூய்மையான கொள்கையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள திருமதி திரௌபதி அவர்கள் தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாநிலங்கள் வாரியாக சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் நாளை காலை புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும், புதுச்சேரி மாநில முதல்வரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பிறகு நாளை மதியம் வருகிறார்.

சென்னையில் நடைபெறும் சிறப்பு அழைப்பாளர் களுக்கான கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கத்தினர்களான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், திரு ஓ .பன்னீர்செல்வம் அவர்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதன் மாநில தலைவர் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன். தேமுதிக செயல் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த ஆண்டு நம் நாட்டின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் திரௌபதி முர்மு நமது கலாச்சாரத்தை பாதுகாப்பவர்களான பழங்குடியினர் சமூகத்தினருக்கு கிடைக்க வேண்டிய தகுதி வாய்ந்த அங்கீகாரம் ஆகும்.

எனவே சமூக நீதி என்றால் என்ன என்பதை உலகுக்கு உணர்த்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பழங்குடியினப் பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கப் பட வேண்டியது என்ன வென்றால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ள நிலையில், புதிய அவைத் தலைவர் தேர்வுக்குப்பின்னர், 23 தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பின்னர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் காலாவதியாகி விட்டது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியும் தனது சமூக வலைதள பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை நீக்கி தலைமை நிலைய செயலாளர் என தனது பயோவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். 

அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் ஒருங்கிணைப்பாளர் என்றபெயரில் அனுப்பும் அறிக்கைகள் மற்றும் இன்ன பிற கடிதங்களும் செல்லாது என கூறப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொருளாளர்தான் என்றும், அவர் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!