அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகள்... தமிழக பாஜகவினர் குஷி!

By Asianet TamilFirst Published Feb 5, 2019, 2:35 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரிலோ அல்லது கன்னியாகுமரிலோ தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வருவதற்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணியை இறுதி செய்ய இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரிலோ அல்லது கன்னியாகுமரிலோ தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வருவதற்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணியை இறுதி செய்ய இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

பாஜகவுக்கு எதிராக அதிமுகவில் தம்பிதுரை, பொன்னையன் போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்ற அரசியல் அரங்கில் பேசப்பட்டது. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தேசியக் கட்சி மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசிவருவதாக’ தெரிவித்தார். 

தேசிய அளவில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் திமுக கூட்டணியில் உள்ள நிலையில், எஞ்சிய கட்சி பாஜக மட்டுமே. எனவே பாஜகவுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக ஓ. பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியிருக்கிறார். அ.தி.மு.க.வில்  தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் தொடங்கிவிட்டது. 

இந்நிலையில் அதிமுக - பாஜக இடையேயான பேச்சுவார்த்தை திரைமறைவில் வேகம் பிடித்துள்ளது. தொகுதி பங்கீட்டு தொடர்பாக அதிமுகவில் அமைக்கப்பட்ட குழுவில் உள்ள கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மேலிடத் தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை சுமூகமாகப் பேசி இறுதி செய்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

பாஜக சார்பில் 10 முதல் 12 தொகுதிகள் வரை அதிமுகவிடம் கேட்கப்பட்டிருக்கின்றன. பாஜகவுக்கு வழங்கும் தொகுதிகளில் சிறு கட்சிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதால், இத்தனை தொகுதிகளைக் கேட்டுள்ளன. ஆனால், 10 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்று பாஜக தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும் என இரு கட்சி வட்டாரங்களும் கூறுகின்றன.

 

வரும் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்ய பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. ஒரு வேளை கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டால், அடுத்த கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி வருதற்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் அதிமுக-பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடி பிரச்சாரத்துக்கு வரும்போது அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற பாஜக சார்பில் திட்டம் வகுக்கப்பட்டுவருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அதிமுகவினரை விட பாஜகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

click me!