ஸ்டாலினை ரவுண்டு கட்டும் ஓபிஎஸ்.. இந்த கொரோனா நெருக்கடியில் பயங்கர நச்சரிப்பு..

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2021, 9:41 AM IST
Highlights

ஓய்வூதிய பலன்கள் என்பது ஊதியத்தின் ஒரு பகுதி என்பதன் அடிப்படையில் ஏற்கனவே நிதி ஒதுக்கி ஆணை வெளியிடப்பட்டதை கருத்தில் கொண்டு 2020 ஜனவரி மாதம் முதல் 2009 டிசம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட வேண்டும் 

ஒரு நிறுவனத்திற்கு வடிவமும், உருவமும் அளிப்பது கட்டிடமாக இருந்தாலும், அதற்கு பெருமை சேர்ப்பவர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களே, அந்த வகையில் அன்றாடம் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் உன்னதமான பணியை மேற்கொண்டு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெருமை சேர்ப்பவர்கள் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தொற்றுநோய் காரணமாக மிகுந்த நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையிலும் அரசு போக்குவரத்து கழகங்களின் அடித்தளமாக விளங்கும் போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற முந்தைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பயன்கள் அளிக்கும் வண்ணம் 26-2-2021 நாளிட்ட போக்குவரத்து துறை அரசு ஆணை எண் 34 இன் வாயிலாக 682 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த ஆணை வெளியிடப்பட்ட அன்றே இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக அந்த ஆணையை நடைமுறைப்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் 7-5-2021 அன்று புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. புதிய அரசு பொறுப்பேற்ற 24 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஓய்வூதிய பயன்கள் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை இன்னும் சென்றடையவில்லை என்றும், இதனால் அவர்கள் குடும்ப வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும், நோயின் தாக்கம் உச்சகட்டமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், வேறு வேலைக்கு கூட செல்ல இயலாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே இதற்கான நிதி ஒதுக்கி வெளியிடப்பட்ட அரசாணையின்படி அவர்களுக்குரிய ஓய்வுதிய பயன்களை உடனடியாக விடுவிக்குமாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஓய்வூதிய பலன்கள் என்பது ஊதியத்தின் ஒரு பகுதி என்பதன் அடிப்படையில் ஏற்கனவே நிதி ஒதுக்கி ஆணை வெளியிடப்பட்டதை கருத்தில் கொண்டு 2020 ஜனவரி மாதம் முதல் 2009 டிசம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!