20 நாட்களில் 18 கொலை...? கொலை நகராக மாறிய தலைநகர்..! மக்களின் பாதுகாப்பு கேள்வி குறி? ஈபிஎஸ் கடும் தாக்கு...

By Ajmal KhanFirst Published May 24, 2022, 11:59 AM IST
Highlights

தமிழகத்தில சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், கடந்த 20 நாட்களில் சென்னையில் 18 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கில் சமரசம் இல்லை

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் பொதுமக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் காண்பிக்கக் கூடாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும்  அரசியல், சாதி மதம் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  திமுக ஆட்சியில் கூலிப்படைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறியிருந்தார். இந்தநிலையில்  தமிழ்நாட்டில் திமுக அரசு பதவிக்கு வந்த புதிதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு குறைந்திருந்த குற்றச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அடுத்தடுத்த கொலை செய்யப்பட்டனர். நடு ரோட்டில் வைத்து பைனான்சியர் வெட்டி கொல்லப்பட்டதாக அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர்.

 

தொடர் கொலை, கொள்ளை

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக தெரிவித்துள்ள கருத்தில் , திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பாலியல் தொல்லைகள், கொள்ளைச் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நிலைமை நீடித்தால் சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும். எனவே, தமிழக முதல்வர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

20 நாட்களில் 18 கொலை

இந்தநிலையில் தற்போது தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு  கேள்விகுறியாகி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.  காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் 
சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால்,  தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
 

click me!