அதிமுகவில் கிளம்பியது அமைச்சர்களுக்குள் மோதல்... செல்லூர் ராஜுவுக்கு கே.டி.ராஜேந்திர பாலாஜி பதிலடி..!

By Thiraviaraj RMFirst Published Aug 11, 2020, 11:15 AM IST
Highlights

எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம். 

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடுத்த பேட்டி அதிமுக தலைமையை அதிர வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால் ஓபிஎஸ் தேனி மற்றும் தென் மாவட்டங்கள் என தனது பிரச்சார பயணத்தை சுருக்கிக் கொண்டார். ஆனால் முதலமைச்சர் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்றார். அதிமுக வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்கள் என்று எல்லாம் பிரித்துப் பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

இதன் மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அதிமுகவை தலைமை ஏற்று வழிநடத்தியது இபிஎஸ் தான் என்கிற தோற்றம் உருவானது. இதே போல் சட்டமன்ற தேர்தலுக்கும் இபிஎஸ் தரப்பு தனியாக தயாராகி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

மீண்டும் முதலமைச்சர் பதவியை பெற வேண்டும், தற்போதுள்ள அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி தனக்கு என்று தனியாக தேர்தல் வியூக வகுப்பாளரை ஏற்பாடு செய்துள்ளார். இதன் முலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது தான் எடப்பாடியாரின் திட்டமாக உள்ளது. ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி எடப்பாடியாரை சீண்டும் வகையில் இருந்தது. அதாவது அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் என்று எல்லாம் யாரும் கிடையாது என்கிற ரீதியில் அவர் பேசியுள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் கூடி தான் முதலமைச்சரை தேர்வு செய்வோம் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த தாங்கள் விரும்பவில்லை என்பது தான் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டியின் சாராம்சமாக உள்ளது. அமைச்சராக இருந்து கொண்டு தற்போது முதலமைச்சராக இருக்கும் ஒருவரை நேரடியாக சீண்டும் வகையில் செல்லூர் ராஜூ பேசியிருப்பது தான் தற்போது ஹாட் டாபிக். இந்நிலையில் மாவட்டச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் பதவியை பிடித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எடப்பாடியார்தான் என்றும் முதல்வர் என செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம். களம் கான்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே’’எனத் தெரிவித்துள்ளார். இது அதிமுகவில் உள்ள அமைச்சர்களின் ஒற்றுமையின்மையை காட்டுகிறது. 
 

எடப்பாடியார் என்றும் முதல்வர்!

இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிருத்தி
தளம் அமைப்போம்!
களம் கான்போம்!
வெற்றி கொள்வோம்!
2021-ம் நமதே!

— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl)

 

click me!