அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்ய புதிய திட்டம்... அதிருப்தியை சமாளிக்க எடப்பாடி அதிரடி வியூகம்!

By Asianet TamilFirst Published Feb 21, 2019, 11:20 AM IST
Highlights

அதிமுக சார்பில் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக சார்பில் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா இருந்தபோது வேட்பாளர்களை வேகமாக அறிவித்துவிட்டு பிரச்சாரத்துக்கு செல்வது வழக்கம். தற்போது ஜெயலலிதா இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்த முறை பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிவிட்ட நிலையில், மேலும் சில கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது போக, 20 முதல் 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிமுக மக்களவையில் உள்ள தற்போதைய எம்.பி.க்கள் 37 பேருமே தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். இதேபோல ஜூலையில் பதவி முடியப் போகிற அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்திருக்கிறார்கள். ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு போக எஞ்சிய தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் போட்டியிட முடியும் என்பதால், எந்தத் தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு போகும், யாருக்கெல்லாம் சீட்டு கிடைக்காமல் போகும் என்ற பட்டிமன்றம் அதிமுகவுக்குள் நடந்துவருகிறது. 

ஆனால், அதிமுகவில் குறைந்தபட்சம் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றன. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் வாரிசுகள் பலரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார்கள். இவர்களில் யாருக்கெல்லாம் சீட்டு கிடைக்கும் என்ற விவாதமும் அதிமுகவில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோதே வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டம் நடந்த கதை உண்டு என்பதால், இந்த முறை அதுபோன்ற அதிருப்தி வெடிக்குமா என்ற ஆலோசனையும் அதிமுக தலைமைக்கழகத்தில் செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.  

இதுகுறித்து அக்கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகியிடம் கேட்டபோது, “ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க. முதன் முறையாக  நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய அமைச்சர்கள், அவர்களின் மகன்கள் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் சீட்டு கேட்டுள்ளனர். 

இதனால் கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக நிச்சயம் சிலர் போர்க்கொடி தூக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கும் வகையில் முன் கூட்டியே வேட்பாளர் பட்டியலை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம். முன்கூட்டியே அறிவித்தால், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும், சரி செய்ய கால அவகாசம் கிடைக்கும். ஜெயலலிதா இருந்தபோது வேட்பாளர்கள் தேர்வில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறையைப் பின்பற்றவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

click me!