
* யார் சட்டத்துக்கு புறம்பாக ‘பில்’ இல்லாமல், தொழில் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியானது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்: சி.பி.ராதாகிருஷ்ணன். (அப்படிங்ளா தல! நம்ம கட்சியில எல்லாரும் பில் வெச்சுதான் தொழில் பண்ணிட்டு இருக்காங்களோ!? சரி அது கூட போகட்டும். மல்லையா, நீரவ்ன்னு ரெண்டு கஸ்மாலங்கள் கடல் தாண்டி எஸ்கேப் ஆனாங்களே, உங்க வல்லரசு ஆட்சியாலே ஏன் அவனுங்களை தூக்கிட்டு வர முடியலை?ன்னு விளக்கம் சொல்ல முடியுமா?)
* தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அமைச்சர் வேலுமணி குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்தும், தேர்தல் விதிமுறை மீறி மக்களிடம் பொய் பிரசாரம் செய்துள்ளார்: கோவை அ.தி.மு.க. புகார். (பாஸு, பொய் பிரசாரம் செய்யக்கூடாதுங்கிறது மட்டும் தேர்தல் விதியில இருக்குதுன்னு வெச்சுக்குங்க, இந்த நாட்டுல தேர்தல் பிரசாரம்ன்னு ஒன்றை எந்த கட்சியும் செய்யவே முடியாது. இதெல்லாம் தெரிஞ்சும், தெரியாத மாதிரி சீன் போடுறீங்க பாருங்க, அதான் ம்ம்ம்முடியலை)
* போலீஸ் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வருகின்றன. தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து சோதனை செய்யலாம். அதற்கு நமக்கு உரிமை இருக்கிறது: மு.க.ஸ்டாலின். (சர்தான் ச்சும்மாவே Put up கேஸ் போட்டு தி.மு.க. காரங்களை தேர்தல் வேலை செய்ய விடாம தடுக்கிறதா ஒரு தகவல் இருக்குது. இப்ப என்னடான்னா, போலீஸ் சொத்தை சேதப்படுத்திட்டானுங்க! அப்படிங்கிற கேஸுல தொண்டர்களை சிக்க வைக்க தளபதி தயாராயிட்டார்)
* மக்களைப் பற்றி சிந்தித்து, தொலைநோக்கு திட்டங்கள் எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன: ஓ.பன்னீர்செல்வம். (மக்கள்னா, உங்க பசங்கதானே தலைவா! உங்க பையன் ரவிக்கு சீட், ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனுக்கு சீட், ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு சீட், பி.ஹெச்.பாண்டியன் பையன் மனோஜ் பாண்டியனுக்கு சீட்!ன்னு உங்க கட்சியின் முக்கிய தலைகளின் மகன்களோட எதிர்காலத்தை தொலைநோக்கில் பார்த்து செயல்படும் திட்டங்கள்தானே? ஓகே ஓகே)
* இரு கட்சிகளில், ஒரு கட்சி ஆட்சி அமைக்க பற்றாக்குறை ஏற்படும்போது குதிரை பேரம், இதில் குதிரைகள் விலை போகும். மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் மனிதர்கள். விலை போக மாட்டார்கள்: கமல்ஹாசன். (அய்ய்யய்யய்ய! ஏற்கனவே வெயிலு மண்டையை பொளக்குது. இதுல இந்த மனுஷன் வேற ஒரே விஷயத்தை சுத்திச் சுத்தி பேசிக்கினு! ஏம்பா யாருப்பா இவருக்கு டார்ச் லைட் சின்னம் கொடுத்தது. பேசாம சுருள் சுருளா கொசுவத்தி சின்னம் கொடுத்திருக்கலாம்.)