அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தான்.. தமிழ்மகன் உசேன் அறிவிப்பு.. வேட்புமனுவை வாபஸ் பெறுகிறதா ஓபிஎஸ் அணி?

By vinoth kumarFirst Published Feb 4, 2023, 1:37 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் உத்தரவிட்டது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தென்னரசு தொடர்வார் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் உத்தரவிட்டது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றார். 

அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் தென்னரசுவை வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் கோரி படிவங்கள் அனுப்பப்பட்டன. அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று தலைமை கழகத்துக்கு வந்த தமிழ்மகன் உசேன், கே.எஸ்.தென்னரசுவே அதிமுக வேட்பாளராக தொடர்வார் என்றார்.

இதுதொடர்பாக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான, அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளரை, கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, அனைத்து கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று (4.2.2023) அனுப்பப்பட்டுள்ளது. கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து, அதனை 5.2.2023 அன்று இரவு 7 மணிக்குள், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் என்னிடம் சேர்த்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த கே.எஸ். தென்னரசு தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதால்,  ஓபிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஓபிஎஸ் தரப்பு வாபஸ் வாங்கும் பட்சத்தில் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

click me!