
பிரதமர் மோடி அரசின் மக்கள் நல திட்டங்களை வீடுவீடாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவைத்த அவர், இவ்வாறு கூறினார்.
குமரி மாவட்டத்திற்கு தேர்தல் சுற்று பயணத்திற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பின்பு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முதற்கட்டமாக அவர் சுசீந்திரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டுபிரசுரம் வழங்கி, தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து திறந்தவெளி வாகனம் மூலம் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இங்கு திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் மிகவும் திருப்தியாக இருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது நான் தேர்தல் பிரச்சாரத்தை குமரி தொடங்கி வைத்துள்ளேன். பொன் ராதாகிருஷ்ணன் தனது அடுத்தகட்ட பிரசாரத்தை மேற்கொண்டு தனது வெற்றியை நிலை நாட்டுவார். பிரதமர் மோடி அரசின் மக்கள் நல திட்டங்களை தொண்டர்கள் வீடுவீடாக கொண்டு சேர்க்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறோம், தமிழ்நாட்டில் அதிமுக, பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி களின் கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.