மழை வெள்ளத்தில் மேற்கொண்ட சிறப்பான மீட்பு பணியின் காரணமாக காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுகவிற்கு வெற்றியை பரிசாக மக்கள் அளிக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வெள்ள பாதிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி உதயகுமார், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் திமுக அரசு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ஆர்.பி.உதயகுமார் சென்னை வாசி இல்லை என்பதால் அரசு மேற்கொண்ட பணிகள் அவருக்கு தெரியாமல் இருக்கலாம். மழைவெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் 3 நாளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 70 கோடி அளவு உணவுப் பொருட்களை கட்டணம் இன்றி வழங்கினோம். 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினோம் என தெரிவித்தார்.
ஒரு சொட்டு தண்ணீர் தேங்காது .?
நாங்கள் மேற்கொண்ட மழை வெள்ள நிவாரணப் பணியின் விளைவாக சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதியையும் திமுகவுக்கு பரிசாக வழங்க சென்னை மக்கள் தயாராக இருக்கின்றனர் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ஆர்பி உதயகுமார், ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்னையில் தேங்காது என்று கூறியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 2021 தேர்தல் பரப்புரையின் போது அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் 2 ஆயிரம் கோடிக்கு வடிகால் பணி நிறைவடைந்து. சென்னையை சிங்கப்பூராக்கி விட்டதாகவும் , ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று கூறினார் என்று தெரிவித்தார்.
ஒரே நாளில் 80செ.மீ மழை
இதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அப்படி எதுவும் பேசவில்லை. ஒரு செட்டு தண்ணீர் கூட தேங்காது என்று நீங்கள் கூறியது தொடர்பாக தான் கேள்வி எழுப்பினார் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, 1400 கோடியில் நீங்கள் கால்வாய் கட்டியிருந்தீர்கள். திருப்புகழ் குழு பரிந்துரைப்படி 2100 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் மழைநீர்கால்வாய் பணி காரணமாக 20 செ.மீ அளவு மழை பெய்தால் , அந்த நீர் கால்வாய் வழியே வடிந்து சென்றடைந்து விடும். ஆனால் ஒரே நாளில் 80 செ.மீ க்கு மேல் மழை பெய்த காரணத்தால் தான் தண்ணீர் தேங்கியது.
கையை கட்சி சும்மா இருக்கவில்லை
இதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், எங்களை அடிமை என்றீர்கள்..ஆனால்38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு நீங்கள் தமிழக மக்களுக்கு எவ்வளவு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நாங்கள் உங்களைப் போல் கையை காட்டிவிட்டு, கையை கட்டிக் கொண்டோ சும்மா இருக்கவில்லை.. மத்திய அரசு எங்களுக்கு நிவரணத்தை தராவிட்டாலும் எங்கள் கஜானாவில் இருந்து எடுத்து மக்களுக்கு நிவாரணத்தை கொடுத்துள்ளோம். மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும். நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்