பாஜக, அதிமுக உறவு கணவன் மனைவி போன்றது, தினமும் மனைவிக்கு ஐ லவ் யூ சொல்ல முடியாது என கூட்டணி குறித்த கேள்விக்கு எச்.ராஜா பதில் அளித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, சனாதன தர்மம் நிலையானது. வெளிநாட்டு ஆய்வாளர் மேக்ஸ் மூல் ஆய்வில் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிவித்துள்ளார். வள்ளுவர் தனது குரலில் நான்கு வகையான ஜாதிகளை அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இது பற்றியெல்லாம் வைரமுத்துவுக்கு தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு வள்ளுவரை வைத்து பதில் அளித்துள்ளார். வைரமுத்துவுக்கு மானமும் கிடையாது, வெட்கமும் கிடையாது. அவருக்கு என்னவெல்லாம் தெரியும் என்று சின்மயி தெரிவித்துள்ளார். ஒரு முழம் கயிறு கூடவா அவருக்கு கிடைக்கவில்லை?
இந்தியாவை சிதைக்க வேண்டும் என்பதற்காகவே India கூட்டணி உருவாகியுள்ளது. காங்கிரசின் உண்மையான முகம் தற்போது தெரிய வந்துள்ளது. டெங்குவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி இந்தியாவின் 80 சதவீத பெரும்பான்மை மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற வகையில் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதிக்கு எதிராக பாஜக சார்பில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்படும்.
உதயநிதி பேசியதை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்ப்போம். 13 வருடங்களாக வீட்டு வாடகை கொடுக்காத சீமான் ஒரு பிராடு. இரண்டு லட்சுமிகள் புகார் கொடுத்ததுமே முழு சூரிய முகியாக மாறி திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக இடையிலான தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கணவன் மனைவிக்கு தினமும் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, பாஜக அதிமுக உறவு என்பது கணவன் மனைவி போன்றது என்று கூறினார்.