
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டது. இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனாலும், ஓ.பி.எஸ். அணி தலைவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அதிருப்தியில் இருந்த
ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் குரல் தற்போது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். சில நாட்களுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் சமாதிக்குப் போய் தியானம் செய்து விட்டு தர்மயுத்தம் தொடங்கி இருப்பதாக பிரகடனம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். மாஃபா பாண்டியராஜனை தவிர ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களுக்கு வேறு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இரட்டை இலை சின்னம் வாங்கிக் கொண்டு தம்மை ஓரங்கட்டி விடுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வமும், தேர்தல் ஆணையம் முடிவு வந்துவிடட்டும் பிறகு செய்துவிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமியும் கூறி வருகிறாராம். அணிகள் இணைப்பால் மனங்கள் இணையவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது ஆதரவாளர்கள் சிறப்பாக வரவேற்றனர். இந்த வரவேற்பில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் இந்த வரவேற்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்., அணியினரிடையேயான விரிசல் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் மீண்டும் ஒரு தர்மயுத்தம் வெடிக்க வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது.