
பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது “கை” நீட்டினால், கையை வெட்டிவிட வேண்டும் என பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் நித்யானந்த் ராய் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில், துணை முதல்வர் சுஷில் மோடி கலந்துகொண்ட விழாவில் பேசிய நித்யானந்த் ராய், பிரதமர் மோடியை எதிர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்தார்.
ஏழை குடும்பத்தில் பிறந்து, தனது உழைப்பின் மூலமாக மட்டுமே நாட்டின் பிரதமராகியுள்ளார் மோடி. ஊழல், வறுமை, கறுப்புப்பணம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வெற்றி கண்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது “கை” நீட்டினால் அவர்களது கையை நாம் இணைந்து உடைக்க வேண்டும். தேசவிரோதிகளும் ஏழைகளுக்கு எதிரானவர்களும்தான் மோடியை எதிர்ப்பார்கள். பாஜகவைத்தவிர நாட்டில் வேறு எந்த சக்திகளுக்கும் இடமில்லை என ஆக்ரோஷமாக பேசினார்.
பீகார் மாநில பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான நித்யானந்த் ராயின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.