
பத்மாவதி திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசனின் கருத்து கண்டிக்கத்தக்கது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படம் வரும் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பாஜக, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
இதைதொடர்ந்து பத்மாவதி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த படப் பிரச்னையில் நடிகை தீபிகா படுகோனே பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் அவருக்கான சுதந்திரத்தை மறுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய திரைப்படங்களுக்கும் பல்வேறு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன், இது சிந்திப்பதற்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறையுடன் கூடிய எந்த விவாதமும் மோசமானதாகும் என்றும் கமல் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசனின் கருத்து கண்டிக்கத்தக்கது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சரித்திர நிகழ்வை கொச்சைப்படுத்தி பத்மாவதி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சரித்திர நிகழ்வுகளை கேலி செய்வதற்கு கமல்ஹாசன் போன்றோருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் எச்.ராஜா குறிப்பிட்டார்.