மீண்டும் பாஜக ஆட்சிதான் !! அடித்துச் சொல்லும் அதிரடி கருத்துக் கணிப்பு !!

By Selvanayagam PFirst Published Mar 18, 2019, 10:23 PM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பிரபல ஆங்கில தொலைக்காட்சியான  டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்  11 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான டைம்ஸ் நவ்வும், விஎம்ஆர் நிறுவனமும் இணைந்து ஒரு  கருத்து கணிப்பை நடத்தின. கருத்துக் கணிப்பு  முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி  இன்று மாலை வெளியிட்டுள்ளது.

அந்த கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 283 இடங்கள் கிடைக்கும் என்றும்,  காங்கிரஸ் கூட்டணிக்கு 135 இடங்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 125 தொகுதிகளை மற்ற கட்சிகள் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு பாலகோட் தாக்குதலுக்கு பின்னர், 5 நாட்கள் கழித்து நிறைவடைந்தன. இதையடுத்து  அந்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் மாநில வாரியாகவும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

அதன்படி உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 42 இடங்களை கைப்பற்றும் என்றும்  மாயாவதி, அகிலேஷ் கூட்டணி 36 தொகுதிகளை வெல்லும் என்றும்,  காங்கிரஸ்  கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 தொகுதிகளில் பாஜக கூட்டணி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளையும் பாஜக கூட்டணி வெல்லும் என்று அந்த கருத்து கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாஜகவுக்கு கூட்டணிக்கு 22 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 7 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கூட்டணி அமோகமாக கைப்பற்றும். ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகள் படுதோல்வி அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல் அரியானாவில் 10 தொகுதிகளில் 8 தொகுதிகள் பாஜக கூட்டணிக்கும், 2 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பீகாரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 17 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!