முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்பாக பொன்னையன் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி அளித்த நாஞ்சில் கோலப்பன் கடந்த வாரம் ஓபிஎஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பொன்னையனின் ஆடியோ வெளியீடு
அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அப்போது ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன் ஒரு ஆடியோ பதிவை ஒன்று வெளியிட்டு அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுவதாக ஒரு ஆடியோவானது வெளியிடப்பட்டது. அதில், எடப்பாடி பழனிச்சாமியால் சொந்தமாக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார். சிவி சண்முகம், கேபி முனுசாமி தான் முடிவு எடுக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை சி. வி சண்முகம், வேலுமணி தங்கமணி ஆகியோர் வழி நடத்துவதாக தெரிவித்து இருந்தார். இந்த கருத்து அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாஞ்சில் கோலப்பன் நீக்கம்
இதனையடுத்து பொன்னையன் ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். கட்சி நிர்வாகிகள் என்னிடம் பேசும்போது பதிவு செய்யாதீர்கள் .என என்னிடம் கூறி பேசுவது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாஞ்சில் கோலப்பன் தெரிவித்திருந்தார். மேலும் பொன்னையன் ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் தான் இழந்தது அதிகம் எனவும், தொழில் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த பேச்சு ஓபிஎஸ்ஐ அதிர்ச்சியடைய செய்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாஞ்சில் கோலப்பனை நீக்கி ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த நெஞ்சில் கோலப்பன், ஓபிஎஸ் உடன் ஏழு ஆண்டுகள் எந்த பதவியும் எதிர்பார்க்காமல் விசுவாசத்துடன் பயணித்தவன். மேலும் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது கூட பதவி கேட்டு ஓபிஎஸ் அவர்களின் வாசல் நின்றேனே தவிர பதவிக்காக கொண்ட கொள்கையில் இருந்து மாறவில்லை என தெரிவித்தார். மேலும் உண்மைகள் விரைவில் வெளியே வரும், உண்மை உழைப்புக்கு கிடைத்த பரிசு எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
மீண்டும் ஓபிஎஸ் அணியில் நாஞ்சில் கோலப்பன்
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்பட்ட திரு. நாஞ்சில் K.S. கோலப்பன் அவர்கள், தான் செய்த தவறுக்கு நேரில் வருத்தம் தெரிவித்ததன் அடிப்படையில், இன்று முதல் மீண்டும் கழகத்தில் இணைந்து செயல்படவும், கழக அமைப்புச் செயலாளராக பணியாற்றவும் அனுமதிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்