
மதுரை
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. புத்துணர்ச்சியுடன் செயல்படுகிறது என்று மதுரையில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மதுரை மாவட்டத்தில், வடக்குமாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் நேற்று நடைப்பெற்றது.
இந்த முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது அவர், "இலவச மடிக்கணினி, கல்வி கட்டண சலுகை என இளைஞர்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. எனவே தான் கடந்த முறை மீண்டும் அவர் முதலமைச்சராக இளைஞர்கள் ஆதரவு கொடுத்தனர்.
தற்போது அவரது மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. புத்துணர்ச்சியுடன் செயல்படுகிறது. அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் மற்றும் நான் உள்பட அமைச்சராக முடிகிறது. ஆனால், தி.மு.க.வில் குடும்ப அரசியல் மட்டும் தான் நடக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் வர உள்ளதால், மதுரை மக்கள் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.
மதுரையில் கோரிப்பாளையம், தெற்குவாசல், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட பறக்கும் பாலங்கள் வர உள்ளன.
ஒரு மாநிலத்தின் ஆளுநர், மத்திய அரசின் திட்டங்கள் சரியாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்கிறார். அவரிடம் தமிழக மக்கள் கொடுக்கும் மனுக்களை அவர் முதலமைச்சரிடம் தான் தருகிறார். அதில் தேவையில்லாமல் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக திருவரங்கம் கோயிலுக்குச் சென்றார். அவர் என்ன செய்தாலும் முதலமைச்சராக முடியாது.
எட்டு வழி பசுமை சாலை திட்டம் குறித்து சில தவறான தகவல்களை பரப்புகின்றனர். இந்த திட்டதால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை. வன விலங்குகள் மற்றும் இயற்கை வளத்தை காக்க தேவையான இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்" என்று அவர் கூறினார்.